அனுமதிபெறாமல் வைக்கப்படும் கட்-அவுட், பேனர்களை அகற்ற சிறப்பு குழுக்கள் - கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு


அனுமதிபெறாமல் வைக்கப்படும் கட்-அவுட், பேனர்களை அகற்ற சிறப்பு குழுக்கள் - கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 18 Sept 2019 5:15 AM IST (Updated: 18 Sept 2019 4:53 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் அனுமதி பெறாமல் வைக்கப்படும் கட்-அவுட், பேனர்களை அகற்ற சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும் என்று மாவட்ட கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி,

புதுச்சேரி மாவட்டத்தில் சட்ட விரோதமாக, அங்கீகரிக்கப்படாத கட்-அவுட், பேனர்களை அகற்றுவதற்கும், தடுப்பதற்கும் குற்றவியல் நடைமுறை சட்டம் 144-வது பிரிவின் கீழ் கடந்த 14-ந் தேதி மாவட்ட கலெக்டரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் அர்ஜூன் சம்பத்(பொறுப்பு) தலைமை தாங்கினார். கூட்டத்தில் துணை கலெக்டர்கள், போலீஸ் சூப்பிரண்டுகள், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், பொதுப்பணித்துறை பொறியாளர்கள், வருவாய்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள் அனுமதியின்றி பேனர் மற்றும் கட்-அவுட்டுகளை அமைக்கக்கூடாது. உள்ளாட்சி அமைப்புகள், பொதுப்பணித்துறை ஆகியவை இணைந்து சாலை மற்றும் நடைபாதைகளில் அனுமதி பெறாமல் வைக்கப்பட்டுள்ள கட்-அவுட், பேனர்களை அகற்ற வேண்டும்.

உயர் கட்டிடங்களில் பதாகைகள் அமைப்பதற்காக கட்டமைப்புகளின் உறுதித்தன்மையை புதுச்சேரி நகர அமைப்பு குழு சரிபார்க்கும். ஆபத்தான நிலையில் உள்ள கட்டிடங்களில் விபத்து ஏற்படாமல் தடுக்க துணை கலெக்டர் குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிப்பார்.

அச்சகங்கள் நகராட்சியின் உரிய அனுமதி பெறாமல் பேனர்களை அச்சிடக் கூடாது. இது தொடர்பாக உள்ளாட்சி அமைப்புகள் தகுந்த விழிப் புணர்வு ஏற்படுத்த வேண்டும். சட்டவிரோதமாக, அங்கீ கரிக்கப்படாத பேனர் மற்றும் கட்-அவுட் வைப்பதை தடுப் பதற்கும் அவற்றை உடனடியாக அகற்றுவதற்கும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுக்கள் அமைக்கப்படும். காவல்துறை மற்றும் வருவாய்துறையின் உதவியுடன் தினந்தோறும் இந்த பணிகள் நடைபெற்று அனுமதி பெறாத அனைத்து கட்-அவுட், பேனர்கள் அகற்றப்படும் என்பது உள்பட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

Next Story