தேர்வு கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி அரசு கல்லூரி மாணவர்கள் 2–வது நாளாக போராட்டம்


தேர்வு கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி அரசு கல்லூரி மாணவர்கள் 2–வது நாளாக போராட்டம்
x
தினத்தந்தி 19 Sept 2019 4:00 AM IST (Updated: 18 Sept 2019 6:43 PM IST)
t-max-icont-min-icon

தேர்வு கட்டண உயர்வை திரும்ப பெறக்கோரி அரசு கல்லூரி மாணவர்கள் 2–வது நாளாக வகுப்பை புறக்கணித்தனர். தொடர்ந்து, சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விழுப்புரம்,

தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அரசு கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்தும், இந்த கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும் மற்றும் புதிய கல்வி கொள்கைக்கு எதிராகவும், இந்தி மொழி திணிப்புக்கு எதிராகவும் பல்வேறு மாவட்டங்களில் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ– மாணவிகள் நேற்று முன்தினம் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்றும் 2–வது நாளாக கல்லூரிக்கு வந்த மாணவ– மாணவிகள் வகுப்புகளுக்கு செல்லாமல் வகுப்பை புறக்கணித்தனர். தொடர்ந்து, இவர்கள் அனைவரும் கல்லூரி வளாகத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது தேர்வு கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும், புதிய கல்வி கொள்கை, இந்தி மொழி திணிப்புக்கு எதிராகவும் கண்டன கோ‌ஷம் எழுப்பினர். இருப்பினும் மாணவ– மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த கல்லூரி முதல்வரோ, துறைத்தலைவர்களோ யாரும் முன்வரவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த மாணவ– மாணவிகள் அனைவரும் காலை 11.30 மணியளவில் கல்லூரியில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர். இதையறிந்ததும் விழுப்புரம் நகரம், தாலுகா போலீசாரும் மற்றும் ஆயுதப்படை போலீசாரும் என 150–க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து சென்று விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலைக்கு மாணவ– மாணவிகளை வரவிடாமல் தடுத்து நிறுத்தினர்.

இதனால் மாணவ– மாணவிகள் அனைவரும் கல்லூரி சாலையில் மாதா கோவில் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் தேர்வு கட்டண உயர்வை திரும்ப பெறும் வரை நாங்கள் இங்கிருந்து கலைந்து செல்ல மாட்டோம் என்று கூறி தொடர்ந்து போராட்டம் செய்தனர். 

இதையடுத்து விழுப்புரம் தாசில்தார் கணேஷ், துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் ஆகியோர் விரைந்து வந்து மாணவ– மாணவிகளிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அதன் பிறகு மதியம் 2 மணியளவில் மாணவ– மாணவிகள் அனைவரும் தங்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதேகோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் படிக்கும் மாணவ–மாணவிகள் 2–ம் நாளாக நேற்றும் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story