சீன என்ஜின் பொருத்திய படகு விவகாரம்: காரைக்கால்- காசிமேடு மீனவர்கள் மோதல்; 6 பேரை சிறைபிடித்ததால் பரபரப்பு


சீன என்ஜின் பொருத்திய படகு விவகாரம்: காரைக்கால்- காசிமேடு மீனவர்கள் மோதல்; 6 பேரை சிறைபிடித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Sep 2019 11:00 PM GMT (Updated: 18 Sep 2019 5:17 PM GMT)

அதிக குதிரை திறன் கொண்ட சீன என்ஜின் பொருத்திய விசைப்படகில் கடலுக்குள் சென்று மீன் பிடித்ததாக கூறி காரைக்கால் மீனவர்களுக்கும், காசிமேடு மீனவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் காரைக்கால் மீனவர்கள் 6 பேரை காசிமேடு மீனவர்கள் சிறைபிடித்தனர்.

திருவொற்றியூர்,

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் டி.ஆர். பட்டினத்தைச்சேர்ந்த சிங்கம்மாகாளி என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 10 மீனவர்கள் நேற்று முன்தினம் மாலை கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர். நேற்று அதிகாலையில் அவர்கள், சென்னை அருகே கடலுக்குள் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அவர்களது படகு பழுதாகி நின்றுவிட்டது.

இதையடுத்து காரைக்காலில் இருந்துவந்த சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான மற்றொரு விசைப்படகு மூலம் பழுதான விசைப்படகை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியில் கரைக்கு இழுத்து வந்தனர்.

வெளிமாநில விசைப்படகு இரண்டு காசிமேடு மீன்பிடித்துறைமுகம் அருகே கரையில் நிற்பதை பார்த்த காசிமேடு மீனவர்கள், அவை அதிக குதிரைதிறன் கொண்ட சீன என்ஜின் பொருத்தப்பட்டது என்பது தெரிந்ததும் ஆத்திரமடைந்தனர்.

இதையடுத்து காசிமேடு மீனவர்கள், காரைக்கால் மீனவர்களிடம் அதிக குதிரை திறன் கொண்ட சீன என்ஜினை பொருத்தி ஆந்திர மாநில கடலோரம் கடலில் மீன்பிடிக்க செல்வதால் ஆந்திர மீனவர்கள் காரைக்கால் மீனவர்களுக்கு பதிலாக காசிமேடு மீனவர்களை சிறைபிடித்து கொள்கின்றனர். பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் வருவதில்லை. நாங்கள் அபராதம் கட்டி வருகிறோம் என்று கூறினர்.

இதனால் காரைக்கால்-காசிமேடு மீனவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது சிங்கம்மாகாளி விசை படகில் இருந்த காரைக்கால் மீனவர்கள் 6 பேரை காசிமேடு மீனவர்கள் சிறை பிடித்தனர்.

உடனே பழுதான படகை விட்டுவிட்டு சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான படகில் மீதம் உள்ள காரைக்கால் மீனவர்கள் கடலுக்குள் தப்பிச்சென்றுவிட்டனர்.

அவர்களை பிடிக்க முயன்ற காசிமேடு மீனவர் ஒருவரை, காரைக்கால் மீனவர்கள் சரமாரியாக தாக்கி கடலுக்குள் தள்ளிவிட்டனர். உடனடியாக அவரை மற்ற மீனவர்கள் காப்பாற்றினர். பின்னர் சிறைபிடிக்கப்பட்ட காரைக்கால் மீனவர்கள் 6 பேரையும் காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ராயபுரம் போலீஸ் உதவி கமிஷனர் தினகரன் மற்றும் காசிமேடு மீன் துறை உதவி இயக்குனர் வேலன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்துவந்து இருதரப்பு மீனவர்களையும் சமாதானம் செய்தனர்.

பின்னர் புதுச்சேரி மாநில மீன்வளத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story