பேச்சுவார்த்தை தோல்வி: கன்டெய்னர் லாரிகள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்; துறைமுகங்கள் முடங்கின


பேச்சுவார்த்தை தோல்வி: கன்டெய்னர் லாரிகள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்; துறைமுகங்கள் முடங்கின
x
தினத்தந்தி 19 Sept 2019 4:45 AM IST (Updated: 19 Sept 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் கன்டெய்னர் லாரிகள் நேற்று 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் துறைமுகங்கள் முடங்கின.

திருவொற்றியூர்,

சென்னை துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம், காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகம் ஆகிய துறைமுகங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான கன்டெய்னர்கள் ஏற்றுமதிக்காகவும், இறக்குமதிக்காகவும் கையாளப்படுகின்றன.

இந்த நிலையில் ஒரு டிரெய்லர் லாரியில், ஒரு கன்டெய்னரை மட்டுமே ஏற்றுவோம். லாரிகளுக்கு முறையான வாடகை நிர்ணயம் செய்யவேண்டும் எனக்கூறி லாரிகளை இயக்க மறுத்து 21 சங்கங்களை சேர்ந்த கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் 16-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் சென்னை துறைமுகம், எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி அதானி துறைமுகத்தில் 1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமான கன்டெய்னர்கள் முடங்கி உள்ளன.

இதற்கிடையில் தண்டையார்பேட்டை தாசில்தார் லட்சுமி தலைமையில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள சங்கத்தினரும், சி.எப்.எஸ். அதிகாரிகள் மற்றும் போலீசாரும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமரசம் எட்டப்படாத நிலையில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இதையடுத்து 3-வது நாளாக நேற்றும் கன்டெய்னர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடித்தது. இதனால் துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் பழங்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்பட பல்லாயிரக்கணக்கான கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது.

சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி துறைமுகங்கள் முடங்கின. கன்டெய்னர் லாரி டிரைவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டனர்.

வெளிமாவட்டங்களில் இருந்து சரக்குகளை ஏற்றுமதிக்காக துறைமுகங்களுக்கு கொண்டு வந்த டிரைவர்கள், கன்டெய்னர் லாரிகளிலேயே தங்கி, சமைத்து சாப்பிட்டு வருகின்றனர். இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் எண்ணூர் விரைவு சாலை வெறிச்சோடி கிடக்கிறது.

Next Story