இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை


இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை
x
தினத்தந்தி 18 Sep 2019 10:45 PM GMT (Updated: 18 Sep 2019 7:51 PM GMT)

இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் அறிவுரை வழங்கினார்.

குளித்தலை,

கரூர் மாவட்டம் குளித்தலையில் போக்குவரத்து போலீசார் சார்பில் ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தலைமை தாங்கி, பொதுமக்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். பிரிவு சாலைகளில் இருந்து பிரதான சாலைக்கு வரும்போது இண்டிகேட்டர் போடாமல் திடீரென சாலையை கடக்கும் நபர்கள் விபத்துக்குள்ளாகின்றனர். எனவே சாலையின் இருபுறமும் பார்த்து முறையாக இண்டிகேட்டர் போட்டு கடந்து செல்லவேண்டும். விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்புதர வேண்டும். ஒவ்வொருவரின் உயிரும் மிகவும் முக்கியமானது.

ஆட்டோவில் பயணிக்கலாம்

ஒரு குடும்பத்தில் ஆண் ஒருவர் இறந்துவிட்டால் அந்த குடும்ப சூழ்நிலையே மாறிவிடும். எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டவேண்டுமென மாவட்ட காவல்துறை அன்பான வேண்டுகோள் விடுக்கிறது. நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் சீட்பெல்ட் அணியவேண்டும். பெற்றோர்கள் பலர் தங்களின் சிறுவயது பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்ற அவர்களுக்கு இருசக்கர வாகனங்களை வாங்கி தருகின்றனர். ஆனால் இதில் பல சிறுவர்கள் விபத்துக்குள்ளாகி இறக்கும்நிலை ஏற்படுகிறது. எனவே பெற்றோர்கள் எக்காரணம் கொண்டும் தங்கள் சிறுவயது பிள்ளைகளை இருசக்கர வாகனம் ஓட்ட அனுமதிக்கக்கூடாது. அதுபோல் மோட்டார் சைக்கிளில் கணவர், மனைவி, குழந்தைகள் என 4 பேர் பயணிப்பதால் சிலநேரங்களில் வாகனத்தை முறையாக இயக்கமுடியாத நிலை ஏற்படும்போது விபத்து ஏற்படுகிறது. இதை தவிர்த்து ஆட்டோவில் அவர்கள் பயணிக்கலாம். கரூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் 182 பேர் விபத்தில் உயிரிழந்துள்ளனர். எனவே சாலை விதிகளை முறையாக கடைப்பிடித்து, நிதானமாக வாகனங்களை ஓட்டவேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

ஊர்வலம்

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற ஹெல்மெட் அணி வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். குளித்தலை பெரியார் நகரில் இருந்து தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் விழிப்புணர்வு தொடர்பான பதாகைகளை ஏந்தியவாறு சென்றனர். இதில் மாவட்ட கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு பாஸ்கரன், குளித்தலை போலீஸ் துணை சூப்பிரண்டு கும்மராஜா, வட்டார போக்குவரத்து வாகன ஆய்வாளர் கோவிந்தராஜ், குளித்தலை போலீஸ் இன்ஸ்பெக்டர் திருமலைராஜன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்தி கேயன், போலீசார், இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுனர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story