மாணவனை கடத்த முயன்ற சம்பவத்தில் திருப்பம்: சக மாணவனுடனான தகராறை மறைக்க நாடகமாடியது அம்பலம்


மாணவனை கடத்த முயன்ற சம்பவத்தில் திருப்பம்: சக மாணவனுடனான தகராறை மறைக்க நாடகமாடியது அம்பலம்
x
தினத்தந்தி 19 Sept 2019 3:30 AM IST (Updated: 19 Sept 2019 1:48 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளையில் பள்ளி மாணவனை கடத்த முயன்ற சம்பவத்தில் திடீர் திருப்பமாக சக மாணவனுடன் தகராறை மறைக்க நாடகமாடியது போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.

களியக்காவிளை,

களியக்காவிளை அருகே இஞ்சிவிளையை சேர்ந்த 13 வயது சிறுவன், பாறசாலையில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறான். நேற்று முன்தினம் காலையில் களியக்காவிளையில் உள்ள முஸ்லிம் ஜமாத்தில் அரபி வகுப்பை முடித்து விட்டு வீடு திரும்பினான்.

அப்போது, அவனின் சட்டை கிழிந்து இருந்தது. வீட்டில் உள்ளவர்கள் இதுகுறித்து கேட்டனர். அதற்கு மாணவன், வீட்டின் அருகே வந்தபோது, வேனில் வந்த 3 மர்ம நபர்கள் தன்னை கடத்த முயன்றதாகவும், அவர்களிடம் தப்பி வந்தபோது சட்டை கிழிந்ததாகவும் கூறினான்.

கேமரா பதிவுகள் ஆய்வு

இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் களியக்காவிளை மற்றும் பாறசாலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் மாவட்டம் முழுவதும் போலீசாரை உஷார் படுத்தினர்.

மேலும், இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. பாறசாலை போலீசார் மாணவன் கடத்தப்பட்டதாக கூறிய பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், அப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான எந்த பதிவுகளும் இல்லை. இதனால், போலீசாருக்கு மாணவன் மீது சந்தேகம் ஏற்பட்டது.

நாடகமாடியது அம்பலம்

உடனே, போலீசார் மாணவனிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், மாணவன் கடத்தல் நாடகமாடியது அம்பலமானது.

மாணவனுக்கும், அவனுடன் படிக்கும் மற்றொரு மாணவனுக்கும் இடையே அடிதடி தகராறு ஏற்பட்டது. இதில் மாணவனின் சட்டை கிழிந்ததுடன் காயமும் ஏற்பட்டுள்ளது. இதை மறைப்பதற்காக பெற்றோரிடம் கடத்தல் நாடகமாடியதும், இதை நம்பிய பெற்றோர் போலீசில் புகார் கூறியதும் தெரியவந்தது. பின்னர் மாணவனை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.

Next Story