மாவட்ட செய்திகள்

மானாமதுரையில் பட்டப்பகலில் பரபரப்பு: வங்கியில் புகுந்து 2 பேரை வெட்டிய கும்பலை துப்பாக்கியால் சுட்ட காவலாளி; தோட்டா பாய்ந்து ஒருவர் காயம் + "||" + Security guard foils murder bid inside TN bank by shooting gang member in leg

மானாமதுரையில் பட்டப்பகலில் பரபரப்பு: வங்கியில் புகுந்து 2 பேரை வெட்டிய கும்பலை துப்பாக்கியால் சுட்ட காவலாளி; தோட்டா பாய்ந்து ஒருவர் காயம்

மானாமதுரையில் பட்டப்பகலில் பரபரப்பு: வங்கியில் புகுந்து 2 பேரை வெட்டிய கும்பலை துப்பாக்கியால் சுட்ட காவலாளி; தோட்டா பாய்ந்து ஒருவர் காயம்
மானாமதுரையில் வங்கிக்குள் புகுந்து 2 பேரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கும்பலை காவலாளி துப்பாக்கியால் சுட்டார். இதில் தோட்டா பாய்ந்து ஒருவர் காயம் அடைந்தார். தப்பி ஓடிய மற்ற 3 பேரை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள்.
மானாமதுரை,

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மெயின்ரோட்டில் அரசு வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த வங்கியில் நேற்று மதியம் 12 மணி அளவில் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன.

அப்போது, மானாமதுரையை சேர்ந்த தங்கமணி (வயது 35), அவருடைய நண்பர் கணேஷ் (36) ஆகியோர் ஒரு மோட்டார் சைக்கிளில் வங்கிக்கு வந்தனர். பணம் எடுப்பதற்காக 2 பேரும் வங்கியில் நின்றிருந்தனர். அந்த நேரத்தில் 4 பேர் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் திடுதிப்பென வங்கிக்கு உள்ளே புகுந்தனர்.


இதை பார்த்த தங்கமணி, கணேஷ் ஆகியோர் பீதி அடைந்து வங்கி அலுவலர்கள் இருக்கும் பகுதிக்கு சென்று மறைந்து கொண்டனர். மேலும் தங்களை காப்பாற்ற கோரி வங்கி ஊழியர்களிடம் கெஞ்சினர். அங்கு என்ன நடக்கிறது? என்பதை புரிந்து கொள்ள முடியாமல் வங்கி ஊழியர்களும், மற்ற வாடிக்கையாளர்களும் திகைத்து நின்றனர். ஆனால் ஆயுதங்களுடன் புகுந்த 4 பேரும், தங்கமணி, கணேஷ் ஒளிந்து இருந்த இடத்தை நோக்கி ஓடினர். இந்த காட்சியை கண்ட அனைவரும் அலறினார்கள். சிலர் சிதறி வெளியே ஓடினர்.

பின்னர் அந்த கும்பலை சேர்ந்த 4 பேரும் தங்கமணி, கணேஷ் ஆகியோரை சுற்றிவளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் தங்கமணி பலத்த காயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் விழுந்தார்.

வங்கியில் நடக்கும் இந்த பயங்கரத்தை அறிந்த வங்கி காவலாளி செல்லநேரு(44) துப்பாக்கியுடன் உள்ளே ஓடி வந்தார். அவரை கண்டதும் ஆயுதங்களை காட்டி, அந்த கும்பல் அவரையும் மிரட்டியது.

இதனால் அந்த கும்பலை நோக்கி துப்பாக்கியால் அவர் சுட்டார். இதில் அந்த கும்பலை சேர்ந்த மானாமதுரை ஆவாரங்காட்டை சேர்ந்த தமிழ்செல்வன்(34) என்பவருக்கு தோட்டா பாய்ந்து காலில் காயம் ஏற்பட்டது. எனவே அந்த கும்பலை சேர்ந்த மற்ற 3 பேரும் வங்கியை விட்டு வெளியே ஓடி தப்பினர். துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் அடைந்த தமிழ்ச்செல்வன், வங்கியில் சுருண்டு விழுந்து கிடந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த தங்கமணி, கணேஷ் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இதேபோல் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயம் அடைந்த தமிழ்ச்செல்வன், சிவகங்கை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

மேலும் சம்பவ இடத்துக்கு ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, சிவகங்கை மாவட்ட சூப்பிரண்டு ரோகித் நாதன், கூடுதல் சூப்பிரண்டு மங்கேளசுவரன், மானாமதுரை துணை சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகியோரும் வந்து பார்வையிட்டு, விசாரணை நடத்தினார்கள்.

மேலும் வங்கியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் தப்பிச்சென்ற 3 பேரை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.

போலீசாரின் விசாரணையில், சமீபத்தில் மானாமதுரையில் அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் சரவணன் நடைபயிற்சிக்கு சென்றபோது அவரை ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. இந்த வழக்கில் தங்கமணிக்கு தொடர்பு உள்ளதாக தெரிய வருகிறது. எனவே அந்த சம்பவத்திற்கு பழி வாங்கும் வகையில் நேற்று வங்கிக்கு வந்திருந்த தங்கமணியையும், அவருடைய நண்பரையும் அரிவாளால் வெட்டி இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து நடந்த இந்த பயங்கர சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. மானாமதுரையில் சிக்கி தவித்த வடமாநிலத்தவர்கள் தனி வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்றனர்
மானாமதுரையில் சிக்கி தவித்த வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் தனி வாகனத்தில் சொந்த ஊருக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
2. மானாமதுரை அருகே ஆள் இல்லாத வீட்டை சாராய கடையாக மாற்றிய 4 பட்டதாரி வாலிபர்கள் கைது
ஆள் இல்லாத வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து, அந்த வீட்டை சாராய கடையாக மாற்றிய 4 பட்டதாரி வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
3. மானாமதுரை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஆய்வு
மானாமதுரை பகுதியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் யூனியன் தலைவர் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டது.