மும்பையில் அரசியல் கட்சியினர், அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தது மராட்டிய சட்டசபைக்கு ‘தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும்’ தலைமை தேர்தல் கமிஷனர் பேட்டி
மராட்டிய சட்டசபைக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று, அனைத்து கட்சியினர் மற்றும் அதிகாரி களுடன் ஆலோசனை நடத்திய பிறகு தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா தெரிவித்தார்.
மும்பை,
288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்டசபையின் பதவி காலம் வருகிற நவம்பர் 9-ந் தேதி முடிகிறது. அதற்குள் தேர்தல் நடத்தி புதிய அரசு பதவி ஏற்க வேண்டும்.
தேர்தல் கமிஷனர்கள்
அதன்படி மராட்டிய சட்டசபைக்கு தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்த நிலையில் சட்டசபை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா நேற்று முன்தினம் மாலை மும்பை வந்தார். அவருடன் தேர்தல் கமிஷனர்கள் அசோக் லாவசா, சுஷில் சந்திரா ஆகியோரும் வந்தனர்.
இந்த நிலையில் நேற்று தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் தேர்தல் கமிஷனர்கள் சயாத்திரி அரசு விருந்தினர் மாளிகையில் நாள் முழுவதும் ஆலோசனை நடத்தினர்.
கோரிக்கை
இதில் பா.ஜனதா, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.
குறிப்பாக சிவசேனா சார்பில் கலந்து கொண்ட அனில் தேசாய், வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பு ரூ.28 லட்சமாக நடைமுறையில் உள்ளது. அதனை ரூ.70 லட்சமாக உயர்த்த வேண்டும். நேர்மையான வாக்குப்பதிவுக்காக அனைத்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களுடன், விவிபாட் எந்திரங்களை இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
எதிர்க்கட்சியினர் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதேபோல மாநில தேர்தல் அதிகாரிகள், அரசின் தலைமை செயலாளர், மாநில போலீஸ் டி.ஜி.பி. மற்றும் உயர் அதிகாரிகளுடன் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் கமிஷனர்கள் ஆலோசனை நடத்தினர்.
பேட்டி
பின்னர் தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஆலோசனையின்போது சில அரசியல் கட்சியினர் வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பை அதிகரிக்கும்படியும், இன்னும் சில கட்சியினர் தேர்தல் செலவு வரம்பை குறைக்கும்படியும் வலியுறுத்தினர்.
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சிகளுக்கு, பழைய வாக்குச்சீட்டு முறை வரலாற்று சின்னமாகி விட்டது என்பதை நாங்கள் பணிவுடன் பதில் அளித்தோம்.
விரைவில் தேர்தல் தேதி
தேர்தல் தேதி எப்போது அறிவிக்கப்படும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பு. டெல்லியில் வைத்து தேர்தல் தேதி அறிவிக்கப்படுவது தான் வழக்கம். அதன்படி மராட்டிய சட்டசபைக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். பல கட்டமாக தேர்தல் நடத்தப்படுமா? என்பது குறித்தும் அப்போது தெரிவிக்கப்படும். தீபாவளி பண்டிகையை கவனத்தில் கொண்டு தேர்தல் தேதியை முடிவு செய்ய வேண்டும் என்று பல கட்சியினர் கருத்து தெரிவித்தனர். முக்கிய பண்டிகைகள், பள்ளி மாணவர்களுக்கான பரீட்சை, விடுமுறை நாட்கள் போன்ற அம்சங்களை கவனத்தில் கொண்டே தேர்தல் தேதி அறிவிக்கப்படும்.
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் வசதியை கருத்தில் கொண்டு வாக்குப்பதிவு மையங்களை தரைதளத்தில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வந்தது. பல வாக்குப்பதிவு மையங்களை தரைதளத்தில் அமைக்க மாநில தேர்தல் அதிகாரிகள் ஏற்கனவே நடவடிக்கை எடுத்து உள்ளனர்.
தேர்தலின் போது நக்சலைட்டு பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் கூடுதல் போலீஸ் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
மராட்டிய சட்டசபைக்கு இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரும் என்றும், அடுத்த மாதம் (அக்டோபர்) தீபாவளிக்கு முன்பு தேர்தல் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story