திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு - குளிரில் பயணிகள் தவிப்பு


திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு - குளிரில் பயணிகள் தவிப்பு
x
தினத்தந்தி 19 Sept 2019 3:15 AM IST (Updated: 19 Sept 2019 3:11 AM IST)
t-max-icont-min-icon

திம்பம் மலைப்பாதையில் லாரி பழுதாகி நின்றதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் குளிரில் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது.

தாளவாடி, 

தாளவாடி அருகே 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்ட திம்பம் மலைப்பாதை உள்ளது. தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை இணைக்கும் முக்கிய சாலையாக உள்ள இந்த மலைப்பாதையில் தினமும் ஏராளமான கார், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் சென்று வருகின்றன. இதில் கனரக வாகனங்கள் மட்டும் செல்லும் போது விபத்து மற்றும் பழுது காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருவது தொடர் கதையாகி விட்டது.

இந்தநிலையில் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் இருந்து சேலத்துக்கு கிரானைட் கற்களை ஏற்றிய கனரக லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரி நேற்று முன்தினம் இரவு 1 மணி அளவில் திம்பம் மலைப்பாதையில் சென்று கொண்டு இருந்தது.

26-வது கொண்டை ஊசி வளைவில் சென்றபோது திடீரென லாரி பழுதடைந்தது. இதனால் லாரி அப்படியே நடுரோட்டில் நின்றுவிட்டது. லாரி பழுதாகி நடுரோட்டில் நின்றதால் அந்த வழியாக வந்த கார், வேன், பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் மேற்கொண்டு செல்லாமல் அப்படியே சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் வரை அணிவகுத்து நின்றன.

இதுபற்றிய தகவல் அறிந்ததும் தாளவாடி மற்றும் ஆசனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். மேலும் தமிழகத்தில் இருந்து சென்ற வாகனங்கள் பண்ணாரி சோதனைச்சாவடியிலும், கர்நாடகாவில் இருந்து வந்த வாகனங்கள் ஆசனூர் சோதனைச்சாவடியிலும் நிறுத்தப்பட்டன.

இதைத்தொடர்ந்து ஆசனூரில் இருந்து மீட்பு வாகனம் அங்கு வரவழைக்கப்பட்டது. ஆனால் பழுதாகி நின்ற கனரக லாரியில் பாரம் அதிகமாக இருந்ததால், லாரியை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் கார், வேன்களில் சுற்றுலாப்பயணிகள், தனியார் மற்றும் அரசு பஸ்களில் வந்த பயணிகள் உணவு மற்றும் போதிய தண்ணீர் கிடைக்காமல் பெரிதும் சிரமப்பட்டார்கள். கடுங்குளிரிலும் தவித்தனர். அதன்பின்னர் ஆசனூரில் இருந்து மெக்கானிக் வரவழைக்கப்பட்டு, லாரியில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணி நடந்தது.

ஆனால் பழுது நீக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. நேற்று மதியம் 2 மணி அளவில் லாரியில் ஏற்பட்ட பழுது சரிசெய்யப்பட்டு அந்த லாரி அங்கிருந்து சேலத்துக்கு புறப்பட்டது. இதைத்தொடர்ந்து மற்ற வாகனங்கள் செல்லத்தொடங்கின. லாரியில் ஏற்பட்ட பழுது காரணமாக திம்பம் மலைப்பாதையில் 13 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கூறுகையில், திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. ஆனால் சுமார் 35 டன் எடை கொண்ட கிரானைட் பாரம் ஏற்றிய லாரி எவ்வாறு திம்பம் மலைப்பாதை வழியாக அனுமதிக்கப்பட்டது என்று தெரியவில்லை. தற்போது இந்த லாரியில் ஏற்பட்ட பழுது காரணமாக கார் மற்றும் வேன்களில் குழந்தைகளுடன் இருக்கும் பெண்கள் பெரிதும் அவதிப்பட்டு உள்ளனர்.

குறிப்பாக இரவுநேரத்தில் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் நின்றதால் அச்சத்தில் உறைந்து விட்டோம். மேலும், போதிய உணவு மற்றும் தண்ணீரும் கிடைக்காததோடு, கடும் குளிரிலும் தவித்தோம். எனவே இரவு நேரங்களில் கனரக வாகனங்களை திம்பம் மலைப்பாதை வழியாக செல்ல அனுமதிக்கக்கூடாது என்றனர்.

Next Story