ஏலகிரிமலையில் மக்கள் நலனுக்காக நிதி ஒதுக்கீடு செய்வதில் தமிழகம் முதலிடம் - சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் பேட்டி
மக்கள் நலனுக்காக நிதி ஒதுக்கீடு செய்வதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது என சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
ஜோலார்பேட்டை,
தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது கணக்கு குழுவினர் நேற்று அதன் தலைவர் பழனிவேல் தியாகராஜன் (பொறுப்பு) தலைமையில் ஏலகிரி வந்தனர். அங்கு தமிழக அரசு ஒதுக்கிய ரூ.1 கோடியே 85 லட்சம் மதிப்பீட்டில் நிரந்தர கோடைவிழா அரங்கம் அமைக்கும் பணிகள், அத்தனாவூரில் பெண்களுக்கான அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு விடுதி அமைக்க ரூ.1 கோடியே 35 லட்சத்தில் நடைபெற்று வரும் பணிகள், உண்டு, உறைவிடப்பள்ளி, மலைவாழ் மாணவர்கள் விடுதி, அரசு மேல்நிலைப் பள்ளி ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் போது, குழு உறுப்பினர்களான ஆர்.நடராஜ், டாக்டர் பரமசிவம், கே.பி.பி.பாஸ்கர், பி.வி.பாரதி, தூசி கே.மோகன் (அ.தி.மு.க.),ரா.ராஜேந்திரன், தா.உதயசூரியன், டி.ஆர்.பி.ராஜா, ஏ.நல்லதம்பி (தி.மு.க.) மற்றும் கலெக்டர் சண்முகசுந்தரம், திட்ட இயக்குனர் பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்திபன், சப்-கலெக்டர் பிரியங்கா, ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ருத்தரப்பா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ், ஏலகிரிமலை முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அச்சுதன், பள்ளி தலைமையாசிரியர் ஆஜம் மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
ஆய்விற்கு பிறகு பழனிவேல் தியாகராஜன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :-
இந்த அமைப்பு அரசியல் கட்சிக்கு அப்பாற்பட்ட அமைப்பு. அரசாங்கம் நிதி ஒதுக்கீடு செய்யும் பணிகள் முழுமையாக பொதுமக்களை சேரும் வகையில் உள்ளதா? என செயல்பாடுகளை கவனிக்கிறோம்.
மேலும் தணிக்கை குழுவினர் சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகளையும் நாங்கள் ஆய்வு செய்கிறோம். இந்தியாவிலேயே மக்களின் நலனுக்காக நிதி ஒதுக்கீடு செய்வதில் தமிழகம் முதன்மை மாநிலமாக செயல்படுகிறது. தமிழக அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு அதிக அளவிலான நிதி ஒதுக்கீடு செய்தும், நிதியை முறையாக பயன்படுத்தாதது எங்கள் குழு அமைப்புக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. குறிப்பாக சமுதாயத்தில் பின்தங்கியவர்கள் தான் அரசு விடுதியில் தங்குகின்றனர். அவர்களுக்கு சுகாதாரம், உணவு, இடம் ஆகியவை சிறப்பாக இருக்கும் வகையில் அமைக்க வேண்டும். மேலும் சில குறைகளை நாங்கள் கலெக்டரிடம் சொல்லியிருக்கிறோம். அவருடைய அதிகாரத்திற்கு உட்பட்ட பணிகளை செய்வதாக கூறியுள்ளார். மேலும் எங்கள் ஆய்வு அறிக்கைகள் சட்டமன்ற கவனத்திற்கும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் கவனத்திற்கும் செல்லும். அதற்கான அறிக்கையை சமர்பிக்க உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story