மாவட்டத்தில் ரூ.12¾ கோடியில் குடிமராமத்து பணிகள் - கலெக்டர் ராமன் தகவல்


மாவட்டத்தில் ரூ.12¾ கோடியில் குடிமராமத்து பணிகள் - கலெக்டர் ராமன் தகவல்
x
தினத்தந்தி 19 Sept 2019 4:00 AM IST (Updated: 19 Sept 2019 3:12 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டு ரூ.12¾ கோடியில் 333 குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருவதாக கலெக்டர் ராமன் தெரிவித்தார்.

சேலம், 

முதல்-அமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறையின் சரபங்கா வடிநில கோட்டத்தின் சார்பில் அந்தந்த பாசனதாரர்கள் சங்கங்களின் மூலம் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் நேற்று கலெக்டர் ராமன் பெத்தநாயக்கன்பாளையம் தாலுகாவில் உள்ள அபிநவம், கொட்டவாடி மற்றும் சின்னகிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்படும் ஏரி, குளங்கள் மற்றும் அணைக்கட்டுகளை பார்வையிட்டார். தொடர்ந்து கலெக்டர் ராமன் நிருபர்களிடம் கூறியதாவது:-

நீர் சேமிப்பிற்கும், நீர் ஆதாரங்களை மேம்படுத்துவதற்கும் ஆறு, ஏரி, குளங்கள், வாய்க்கால்கள், வரத்து கால்வாய்களை தூர்வாரும் பணிகள் மற்றும் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்காக குடிமராமத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்ட பணிகள் பாசனதாரர் சங்கங்களின் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது.

குடிமராமத்து திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் இந்த ஆண்டில்(2019-20) ரூ.5 கோடியே 63 லட்சம் மதிப்பீட்டில் 20 குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருகின்றன. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மாவட்டத்தில் உள்ள 20 ஊராட்சி ஒன்றியங்களிலும் ரூ.7 கோடியே 11 லட்சம் மதிப்பில் ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் என 313 குடிமராமத்து பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை ஆகிய துறைகளின் சார்பில் இந்த ஆண்டில் மொத்தம் ரூ.12 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் 333 குடிமராமத்து பணிகள் நடைபெறுகின்றன. மேலும் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் ரூ.12 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் 79 குடிமராமத்து பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.

மழைக்காலம் தொடங்க உள்ள காரணத்தால், குடிமராமத்து பணிகள் மூலம் ஏரி, குளங்களை தூர்வாரி கரைகளை செம்மைபடுத்தி நீர்நிலைகளை மேம்படுத்தினால் மழைநீரை சேமித்து குடிநீர் தேவைகளை நிறைவேற்றுவதற்கும், விவசாய பணிகளுக்கும் தேவையான நீரையும் பெற்றிட முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரத்துறை) செயற்பொறியாளர் கவுதமன், பெத்தநாயக்கன்பாளையம் உதவி கலெக்டர் அன்புக்கரசி, உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர் பாஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story