கிருஷ்ணகிரியில் குழந்தைகள் வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம் - கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்


கிருஷ்ணகிரியில் குழந்தைகள் வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனம் - கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 Sept 2019 4:00 AM IST (Updated: 19 Sept 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் குழந்தைகள் வளர்ச்சி குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை சார்பாக ராஷ்டிய போஷான் மா- 2019 விழிப்புணர்வு பிரசார வாகனத்தை கலெக்டர் பிரபாகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து பிரசார வாகனம், கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம், ஆர்.சி. பள்ளி வளாகம், அரசு மருத் துவமனை வழியாக சென்று ரவுண்டானாவை அடைந்தது.

இதைத் தொடர்ந்து பிரசார வாகனம் காவேரிப்பட்டணம் சென்று அங்கிருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு சென்றது. முன்னதாக கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகம் அருகில் இருந்து பிரசார ஊர்வலம் புறப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு (பயிற்சி) நல்லசிவம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட புள்ளியியல் ஆய்வாளர் சீனிவாசன், கண்காணிப்பாளர் வெங்கடாசலபதி மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பிரசார வாகனத்தை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்து பேசியதாவது:-

தேசிய ஊட்டச்சத்து மாதத்தையொட்டி செப்டம்பர் முதல் வாரத்திலிருந்து 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், வளர் இளம் பெண்களுக்கு அங்கன்வாடி மையங்களில் எடை பார்த்தல் மற்றும் வளர்ச்சி கண்காணிக்கப்படும். சுகாதார துறையுடன் இணைந்து வீடுகளை பார்வையிடுதல் மூலம் ரத்தசோகை, குறைந்த எடை மற்றும் வளர்ச்சி குறைபாட்டை கண்டறிதல், பச்சிளம் குழந்தைகள் உணவூட்டுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். மேலும் ஊட்டச்சத்து மற்றும் சுகாதார கல்வி அளித்்தல், அங்கன்வாடி மையங்களில் உட்புற, வெளிபுற தூய்மை பணி மேற்கொள்ளுதல், குழந்தைகளுக்கு கை கழுவும் பழக்கத்தை கற்றுக்கொடுத்தல், ஆரம்ப கால குழந்தை பருவ பராமரிப்பு மற்றும் கல்வி நாள் அனுசரித்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

வருகிற 22-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை உணவு செயல்முறை விளக்க கூட்டங்கள் நடத்தி உணவு மாதிரிகளை காட்சிப்படுத்தல் மற்றும் சிறு தானிய உணவு வகைகள் சமையல் போட்டி நடத்தப்படும். பள்ளி செல்லா வளரிளம் பெண்களுக்கு ஊட்டச்சத்து சுகாதாரம் தொடர்பாக விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்துதல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story