கள்ளக்காதலி வீட்டின் முன்பு தொழிலாளி தீக்குளித்து தற்கொலை


கள்ளக்காதலி வீட்டின் முன்பு தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 19 Sept 2019 3:45 AM IST (Updated: 19 Sept 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

கெலமங்கலத்தில் கள்ளக்காதலி வீட்டின் முன்பு தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

ராயக்கோட்டை, 

புதுக்கோட்டையை சேர்ந்தவர் கிஷோர் வின்சென்ட் (வயது 45). கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரியில் உள்ள ஒரு முதியோர் பராமரிப்பு இல்லத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கிஷோர் வின்சென்ட் தனது மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். கெலமங்கலம் ஜீவாநகரை சேர்ந்தவர் சுசீலா (35). இவர் கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இவரும், அந்த இல்லத்தில் சமையலராக வேலை செய்து வந்தார்.

அங்கு வேலை செய்த போது கிஷோர் வின்சென்டுக்கும், சுசீலாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கிஷோர் வின்சென்ட், சுசீலாவின் வீட்டிற்கு சென்று கதவை தட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் கதவை திறக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த கிஷோர் வின்சென்ட் தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார்.

இதில் உடல் கருகிய அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அக்கம்பக்கத்தினர் கிராம நிர்வாக அலுவலர் சிலம்பரசனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் இது தொடர்பாக கெலமங்கலம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவலிங்கம், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராகவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், இது குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாந்தியும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் கிஷோர் வின்சென்ட்டின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story