மும்முனை மின்இணைப்பு கோரி விண்ணப்பித்த மூதாட்டியிடம் ரூ.3,500 லஞ்சம் - வணிக ஆய்வாளர் கைது
மொரப்பூர் அருகே மும்முனை மின்இணைப்பு கோரி விண்ணப்பித்த மூதாட்டியிடம் ரூ.3,500 லஞ்சம் வாங்கிய வணிக ஆய்வாளரை தர்மபுரி லஞ்சஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
மொரப்பூர்,
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள தொட்டம்பட்டியை சேர்ந்தவர் அலமேலு (வயது 60). இவர் தனக்கு சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலத்தில் மின் இணைப்பு பெற்று விவசாய பணிகளை மேற்கொண்டு வந்தார். இந்த நிலையில் அந்த மின் இணைப்பை மும்முனை மின்சார இணைப்பாக மாற்றி வழங்க கோரி தொட்டம்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார்.
இதைத்தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த அலுவலகத்தில் மின் வணிக ஆய்வாளராக பணிபுரியும் மணி(40) என்பவரை அணுகினார். அப்போது மணி ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கொடுத்தால் உடனடியாக மின் இணைப்பை மாற்றி தருவதாக கூறி உள்ளார். இதையடுத்து அலமேலு ரூ.1,000 கொடுத்ததாக கூறப்படுகிறது.
முழுத்தொகையை கொடுத்தால் மட்டுமே மின்இணைப்பு மாற்றித்தரப்படும் என்று அப்போது மணி கூறியதாக தெரிகிறது. இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான அலமேலு இதுதொடர்பாக தர்மபுரி லஞ்சஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து லஞ்சஒழிப்பு போலீசாரின் ஆலோசனைபடி, ரசாயன பவுடர் தடவிய ரூ.3,500-ஐ அலமேலு நேற்று மின்வாரிய அலுவலகத்திற்கு எடுத்து சென்றார். அங்கு மின் வணிக ஆய்வாளர் மணியை சந்தித்து அந்த தொகையை கொடுத்தார்.
அப்போது அங்கு மறைந்திருந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ணராஜன், இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று, லஞ்சம் பெற்ற வணிக ஆய்வாளர் மணியை கையும் களவுமாக பிடித்தனர். இதில் அந்த துறையை சேர்ந்த வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்து அவரிடம் 2 மணிநேரம் துருவித்துருவி விசாரணை நடத்தினார்கள். அதன்பின்னர் மணியை கைது செய்தனர்.
Related Tags :
Next Story