தமிழகம் முழுவதும் 4½ லட்சம் லாரிகள் இன்று ஓடாது - சம்மேளன செயலாளர் தகவல்


தமிழகம் முழுவதும் 4½ லட்சம் லாரிகள் இன்று ஓடாது - சம்மேளன செயலாளர் தகவல்
x
தினத்தந்தி 19 Sept 2019 4:15 AM IST (Updated: 19 Sept 2019 3:13 AM IST)
t-max-icont-min-icon

தமிழகம் முழுவதும் இன்று (வியாழக் கிழமை) 4½ லட்சம் லாரிகள் ஓடாது என மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயலாளர் வாங்கிலி கூறினார்.

நாமக்கல், 

மத்திய அரசு சமீபத்தில் சாலை விதிகளை மீறுபவர்களுக்கான அபராத தொகையை அதிகமாக உயர்த்தி உள்ளது. இதை மறுபரிசீலனை செய்து குறைக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் இன்று (வியாழக்கிழமை) ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் அறிவித்துள்ளது.

இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் ஆதரவு அளித்துள்ளது. இதுகுறித்து சம்மேளனத்தின் செயலாளர் வாங்கிலி கூறியதாவது:-

அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அறிவிப்பின்படி இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெற உள்ளது. இதையொட்டி தமிழகத்தில் 4½ லட்சம் லாரிகள் ஓடாது. மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டம் லாரி தொழிலை அடியோடு நசுக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக மோட்டார் வாகன விதிமீறல்களுக்கு அதிகமாக அபராத தொகை விதிக்கப்படுகிறது. மத்திய அரசு இதை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

ஏற்கனவே டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு போன்றவற்றால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே மத்திய அரசின் நடவடிக்கைகளை கண்டித்து நடைபெறும் இந்த போராட்டத்திற்கு அனைத்து வாகன உரிமையாளர்களும், பொதுமக்களும் ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சென்னகேசவன் கூறுகையில், சாலை விதிமுறை மீறல்களுக்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகையை ரத்து செய்ய வேண்டும். மோட்டார் தொழிலை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இன்று நாடு முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது.

இதனால் நாடு முழுவதும் 45 லட்சம் லாரிகளும், தமிழகத்தில் 4½ லட்சம் லாரிகளும், சேலம் மாவட்டத்தில் சுமார் 38 ஆயிரம் லாரிகளும் இயங்காது. தமிழகத்தில் ரூ.30 கோடி மதிப்பிலான பொருட்களும், சேலம் மாவட்டத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான பொருட்களும் தேக்கம் அடையும். லாரி உரிமையாளர்களுக்கு பல கோடி வருவாய் இழப்பு ஏற்படும். லாரி உரிமையாளர்கள் மட்டுமின்றி அனைத்து வாகன ஓட்டிகளும் பாதிக்கப்படுவதால் புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை திரும்ப பெற வேண்டும், என்றார்.

Next Story