இதய நோயினால் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை - கலெக்டர் நடவடிக்கை
இதய நோயினால் பாதிக்கப்பட்ட வாலிபருக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கலெக்டர் கந்தசாமி நடவடிக்கை எடுத்துள்ளார்.
செங்கம்,
செங்கம் தாலுகா தண்டம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 40), கூலித் தொழிலாளி. அவருடைய மனைவி சின்னபாப்பா (35). இவர்களுக்கு கோவிந்தராஜ் (16), மாரி (8), ஹாசினி (2) என 3 குழந்தைகள்.
இதில் கோவிந்தராஜ் 4 வயது இருக்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்துள்ளனர். அப்போது மருத்துவர்கள், கோவிந்தராஜ் இதய நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளதால் மேற்கொண்டு சிகிச்சை செய்வதற்கு செலவு அதிகமாகும் என தெரிவித்துள்ளார்கள். ஏழுமலையின் குடும்ப வறுமை காரணமாக கோவிந்தராஜிக்கு மேற்கொண்டு சிகிச்சை அளிக்க முடியாமல் வாழ்ந்து வந்துள்ளார்கள்.
இந்த நிலையில் ஏழுமலை தனது குடும்பத்துடன் கடந்த திங்கட்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்களது நிலை குறித்து கலெக்டரிடம் எடுத்துரைத்து உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர். அப்போது கலெக்டர் தனியார் மருத்துவமனையில் எந்தவித கட்டணமும் இல்லாமல் சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.
இதையடுத்து கலெக்டரின் நடவடிக்கையால் ஏழுமலை குடும்பத்தினர் நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு, கோவிந்தராஜிக்கு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் மூலம் உடல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் தமிழக அரசின் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னையில் மேல் சிகிச்சை மேற்கொள்வதற்கு கோவிந்தராஜ் அவரது குடும்பத்தினருடன் வழியனுப்பி வைக்கப்பட்டார்.
கோவிந்தராஜிக்கு சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தமிழக அரசின் மேம்படுத்தப்பட்ட மருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மேல் சிகிச்சை அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலெக்டர் கந்தசாமி, அவர்களின் செலவிற்கு ரூ.10 ஆயிரம் வழங்கினார்.
பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், கோவிந்தராஜ் பிறவி இதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரது குடும்ப வறுமை காரணமாக பெற்றோர் இதுவரை அவருக்கு சிகிச்சை அளிக்க முடியாத ஏழ்மையான சூழ்நிலையில் இருந்துள்ளார்கள். தற்போது கோவிந்தராஜ் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏழுமலை குடும்பத்தினர் வசிக்கும் தண்டம்பட்டு கிராமத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டதில் அப்பகுதியில் 29 குடும்பங்கள் மிகவும் சேதமடைந்த வீடுகளில் எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் வசித்து வருவது தெரிந்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் ஏழுமலை உள்பட 29 குடும்பத்தினருக்கும் ரூ.1 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடுகள், சாலை, மின்சாரம், தெருவிளக்கு, குடிதண்ணீர் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளுடன் அடுத்த 4 மாதங்களில் கட்டித்தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.
கோவிந்தராஜின் தந்தை ஏழுமலை கூறுகையில், ‘எங்கள் மகனுக்கு செலவில்லாமல் மேல் சிகிச்சை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்’ என்றார்.
Related Tags :
Next Story