தண்டராம்பட்டு அருகே, லாரி டிரைவர் கொலையில் மனைவியின் கள்ளக்காதலன் கைது
தண்டராம்பட்டு அருகே லாரி டிரைவர் கொலையில் மனைவியின் கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டார். கள்ளக்காதலை கைவிடும்படி கூறியதால் ஏற்பட்ட தகராறில் மது வாங்கிக்கொடுத்து கல்லால் தாக்கி கொன்றதாக கைதான அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தண்டராம்பட்டு,
தண்டராம்பட்டு அருகிலுள்ள பெரும்பாக்கம் மதுரா குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 40). லாரி டிரைவர். இவரது மனைவி பானுப்பிரியா (32). இவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். கடந்த 16-ந் தேதி வெங்கடேசன் அங்குள்ள ஏரிக்கரையில் தலையில் ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். தண்டராம்பட்டு போலீசார் பிணத்தை கைப்பற்றி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் வெங்கடேசனை அவரது மனைவி பானுப்பிரியாவின் கள்ளக்காதலனான கோலாபாடி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் கொலை செய்தது தெரியவந்தது. இவர் பானுப்பிரியாவின் தங்கை கணவராவார். இதனையடுத்து ராமச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.
ஆட்டோ டிரைவரான அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பான தகவல்கள் கிடைத்தன.
வெங்கடேசன் அவரது மாமியார் புஷ்பாவிடம் சொத்தில் பங்கு கேட்டு தகராறு செய்தார். அப்போது கத்தியால் மாமியாரை குத்தியதில் அவர் படுகாயம் அடைந்தார். அங்கு இருந்த பானுப்பிரியாவின் தங்கை கணவர் ராமச்சந்திரன் இதனை தட்டிக் கேட்டார். கடந்த சில மாதங்களாக வெங்கடேசன் மனைவி பானுப்பிரியாவை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார்.
அந்த சமயத்தில் ராமச்சந்திரனுக்கும் பானுப்பிரியாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதை தெரிந்துகொண்ட வெங்கடேசன் கள்ளக்காதலை கைவிடுமாறு மனைவியிடம் கூறவே அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் பானுப்பிரியாவின் செல்போனை வெங்கடேசன் பிடுங்கிச்சென்று விட்டார். இதை கள்ளக்காதலன் ராமச்சந்திரனிடம் பானுப்பிரியா கூறி கதறி அழுதார்.
இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன், வெங்கடேசனை கொலை செய்ய முடிவு செய்து அவரை நைசாக மது அருந்த அழைத்தார். அதன்படி வந்த வெங்கடேசனுடன் ஏரிக்கரைக்கு சென்றார். இருவரும் மது அருந்தி விட்டு பேசிக்கொண்டு இருந்தபோது தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ராமச்சந்திரன் கல்லால் வெங்கடேசனை தாக்கினார். அதில் அவர் மயங்கி விழுந்தார். தொடர்ந்து சாகும்வரை அவரை கல்லால் தாக்கி விட்டு தப்பிவிட்டார்.
மேற்கண்ட தகவலை ராமச்சந்திரன் வாக்குமூலமாக அளித்துள்ளார். இதனையடுத்து ராமச்சந்திரனை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story