ஆரணி அருகே, ரூ.1 கோடி மதிப்பிலான எரிசாராயம் பறிமுதல் - டேங்கர் லாரி, மோட்டார்சைக்கிள்கள் உள்பட வாகனங்கள் பறிமுதல்


ஆரணி அருகே, ரூ.1 கோடி மதிப்பிலான எரிசாராயம் பறிமுதல் - டேங்கர் லாரி, மோட்டார்சைக்கிள்கள் உள்பட வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 19 Sept 2019 4:00 AM IST (Updated: 19 Sept 2019 3:14 AM IST)
t-max-icont-min-icon

ஆரணி அருகே டேங்கர் லாரியில் கொண்டு வரப்பட்டு கேன்களில் நிரப்பப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக தப்பி ஓடிய 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

ஆரணி, 

ஆரணியில் சேத்துப்பட்டு செல்லும் நெடுஞ்சாலையில் உள்ள நெசல் பஸ் நிறுத்தம் பின்பகுதியில் டேங்கர் லாரி நிற்பதாகவும் அதில் உள்ள எரிசாராயம், கேன்களில் நிரப்பப்படுவதாகவும் விழுப்புரம் மத்திய தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அழகிரி, போலீஸ்காரர்கள் குமரன், அசோக் பிரபாகரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். போலீசாரை பார்த்ததும் அங்கு இருந்த 4 பேர் தப்பியோடினர்.

அந்த இடத்தில் எரிசாராயம் கொண்டு வந்த டேங்கர் லாரி, மற்றொரு லாரி, மினி வேன் உள்பட 5 வாகனங்களும், 4 மோட்டார் சைக்கிள்களும் இருந்தன. அனைத்தையும் தனிப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவர்கள் யார் என்பது தெரியவில்லை. டேங்கர் லாரி எண் மற்றும் மோட்டார்சைக்கிள் எண்களை வைத்து அவற்றின் உரிமையாளர்கள் யார்? இதில் தொடர்புடையவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம், கேன்கள், டேங்கர் லாரி, லாரி, உள்பட வாகனங்களை போளூர் கலால் போலீசில் தனிப்பிரிவு போலீசார் ஒப்படைத்தனர். ஆரணி சுற்று வட்டாரத்தில் சாராயம் இல்லை என கூறி வருகிற நிலையில் எரிசாராயமே லாரிகளில் வந்து இறக்கும் அளவிற்கு இருந்துள்ளது என்பதை கண்டு போலீசாரே திகைத்து வருகின்றனர்.

இது குறித்து மத்திய தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் கூறுகையில், “டேங்கர் லாரியிலிருந்து சுமார் 25 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் வெள்ளை நிற கேன்களில் நிரப்பப்பட்டு மற்றொரு லாரியில் ஏற்றப்பட்டிருந்தது. மேலும் பல ஆயிரம் லிட்டர் எரிசாராயம் டேங்கர் லாரியிலேயே உள்ளது. இவையனைத்தும் ரூ.1 கோடி மதிப்புள்ளது. தப்பி ஓடியவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்” என்றார்.

Next Story