மீனவரை வெட்டிக்கொல்ல முயன்ற வழக்கு: முன்னாள் ஊர் தலைவர் உள்பட 4 பேருக்கு 10 ஆண்டு சிறை


மீனவரை வெட்டிக்கொல்ல முயன்ற வழக்கு: முன்னாள் ஊர் தலைவர் உள்பட 4 பேருக்கு 10 ஆண்டு சிறை
x
தினத்தந்தி 19 Sept 2019 4:30 AM IST (Updated: 19 Sept 2019 3:53 AM IST)
t-max-icont-min-icon

மீனவரை வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில் முன்னாள் ஊர் தலைவர் உள்பட 4 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்செந்தூர் சப்-கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

திருச்செந்தூர், 

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே பழையகாயல் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கிய ஜோசப் செல்வம் (வயது 53). மீனவரான இவர் ஊர் தலைவராக இருந்தார். பழையகாயல் பரிபூரண நகரைச் சேர்ந்த லஷ்தர் மகன் விஜயன் (32). மீனவரான இவர் ஊர் கமிட்டி உறுப்பினராக இருந்தார்.

இந்த நிலையில் ஆரோக்கிய ஜோசப் செல்வம், ஊர் கமிட்டி பணத்தை மோசடி செய்ததாக கூறி, அவரை நீக்கி விட்டு, மற்றொருவரை ஊர் தலைவராக நியமித்தனர். இதற்கு விஜயன்தான் காரணம் என்று ஆரோக்கிய ஜோசப் செல்வம் கருதினார். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்தது.

இந்த நிலையில் கடந்த 17-12-2015 அன்று பழையகாயல் பஜாரில் உள்ள சலூன் கடையில் முகச்சவரம் செய்து விட்டு வெளியே வந்த விஜயனை ஆரோக்கிய ஜோசப் செல்வம், அசோகன் மகன் ராயன் (35), மிக்கேல் அந்தோணி (67), பூரண ஜீவன் டிமல் (55) ஆகிய 4 பேரும் சேர்ந்து அரிவாளால் வெட்டினர்.

இதில் பலத்த காயம் அடைந்த விஜயனின் வலது கால் துண்டானது. அவரை தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து ஆத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்தார்கள்.

இந்த வழக்கு திருச்செந்தூர் சப்-கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பரமேசுவரி, விஜயனை அரிவாளால் வெட்டிக் கொல்ல முயன்ற ஆரோக்கிய ஜோசப் செல்வம், ராயன், மிக்கேல் அந்தோணி, பூரண ஜீவன் டிமல் ஆகிய 4 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் தலா ரூ.6 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும் வலது கால் துண்டிக்கப்பட்ட விஜயன் இழப்பீட்டுத்தொகை கேட்டு மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவை அணுகவும், அந்த ஆணைக்குழு பரிந்துரை செய்யும் இழப்பீட்டு தொகையை தமிழக அரசு விஜயனுக்கு வழங்கவும் நீதிபதி பரிந்துரை செய்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் ரவிச்சந்திரன் வாதாடினார்.

Next Story