பேனர் வைப்பதில் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் திருமண மண்டபங்களின் உரிமம் ரத்து - உள்ளாட்சி துறை இயக்குனர் மலர்க்கண்ணன் எச்சரிக்கை


பேனர் வைப்பதில் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் திருமண மண்டபங்களின் உரிமம் ரத்து - உள்ளாட்சி துறை இயக்குனர் மலர்க்கண்ணன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 19 Sept 2019 4:45 AM IST (Updated: 19 Sept 2019 4:20 AM IST)
t-max-icont-min-icon

பேனர் வைப்பதில் விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் திருமண மண்டபங்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று உள்ளாட்சி துறை இயக்குனர் மலர்க்கண்ணன் எச்சரித்துள்ளார்.

புதுச்சேரி,

சென்னையில் பேனர் சரிந்து விழுந்ததால் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர் சுபஸ்ரீ நிலைதடுமாறி ரோட்டில் விழுந்தார். அப்போது அவர் தண்ணீர் லாரி மோதி பலியானார். இந்த சம்பவம் தமிழகம், புதுச்சேரியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னை ஐகோர்ட்டும் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதைத்தொடர்ந்து தாங்களாகவே முன்வந்து அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் பேனர்களை அப்புறப்படுத்தினார்கள். புதுவை அரசும் ஏற்கனவே பேனர் வைக்க தடை விதித்துள்ளது. தற்போது இதற்கான நடவடிக்கையை தீவிரப்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்க்கண்ணன் இதுகுறித்து நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் புதுவை நகராட்சி ஆணையர் அர்ஜுன் ராமகிருஷ்ணன், உழவர்கரை நகராட்சி ஆணையர் கந்தசாமி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டம் முடிந்ததும் உள்ளாட்சித்துறை இயக்குனர் மலர்க்கண்ணன் கூறியதாவது:-

புதுவையில் பேனர், கட் அவுட் வைக்க தடை உள்ளது. இதுதொடர்பாக திருமண மண்டபம், அச்சகங்களின் உரிமையாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. உள்ளாட்சித்துறையின் அனுமதியின்றி எந்த பேனரும் அச்சிடக் கூடாது.

மக்களுக்கு இடையூற அளிக்கும் வகையில் பொது இடங்களில் பேனர் வைக்கக் கூடாது. உள்ளாட்சித்துறை அனுமதி அளித்துள்ள இடங்களில் மட்டுமே பேனர்கள் வைக்கவேண்டும். இதற்காக அளிக்கப்பட்ட அனுமதி விவரத்தை அந்த விளம்பரங்களில் குறிப்பிட வேண்டும். இல்லாவிட்டால் நிபந்தனைகளை மீறியதாக கருதப்படும்.

திருமண மண்டபங்களில் 10-க்கு 10 அடி என்ற அளவில் 2 பேனர்கள் வைத்துக்கொள்ளலாம். விதிமுறைகளை கடைபிடிக்காமல் பேனர் வைக்கப்பட்டால் அந்த பேனர்களை அச்சிட்டு கொடுத்த அச்சகங்களுக்கு நகராட்சிகள் மூலம் கொடுக்கப்பட்ட வர்த்தக உரிமம் ரத்து செய்யப்படும்.

அதேபோல் விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் திருமண மண்டபங்களுக்கான உரிமங்களும் ரத்து செய்யப்படும். அதுமட்டுமின்றி காவல்துறை மூலமும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பேனர்கள் அனுமதி பெறாமல் வைக்கப்படுவதை கண்காணித்து நடவடிக்கை எடுக்க 24 மணிநேர ரோந்துப்பணி தொடங்கப்பட்டுள்ளது. சாலைகளின் நடுவே உள்ள தடுப்புகளில் (சென்டர் மீடியன்) விளம்பரங்கள் அமைக்க பொதுப்பணித்துறை அனுமதி அளித்துள்ளது. அதற்கான அனுமதியை உள்ளாட்சித்துறையிடமும் பெறவேண்டும் என்ற முறையை கொண்டு வருவோம்.

இவ்வாறு மலர்க்கண்ணன் கூறினார்.

Next Story