திருத்துறைப்பூண்டி நகராட்சியில் ரூ.86 லட்சத்தில் கட்டப்படுகிறது: ஆமை வேகத்தில் நடைபெறும் மின்மயான பணிகள்


திருத்துறைப்பூண்டி நகராட்சியில் ரூ.86 லட்சத்தில் கட்டப்படுகிறது: ஆமை வேகத்தில் நடைபெறும் மின்மயான பணிகள்
x
தினத்தந்தி 20 Sept 2019 3:15 AM IST (Updated: 19 Sept 2019 7:23 PM IST)
t-max-icont-min-icon

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் ரூ.86 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் மின்மயான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. 2 ஆண்டுகள் ஆகியும் இந்த பணிகள் முடிவடையாமல் அவல நிலையில் உள்ளது.

திருத்துறைப்பூண்டி, 

திருவாரூர் மாவட்டத்தில் திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மன்னார்குடி, கூத்தாநல்லூர் ஆகிய 4 நகராட்சிகள் உள்ளன. இந்த நகராட்சிகளுள் குறைந்த பரப்பளவு கொண்டது திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆகும். இங்கு மொத்தம் 24 வார்டுகள் உள்ளன. இங்கு பிரசித்தி பெற்ற கோவில்களும் உள்ளன.

இங்கு 2011-ம் ஆண்டு மக்கள் தொகையின்படி 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள். இந்த நகராட்சி பகுதியில் சுடுகாடு என்பது ஆற்றங்கரை பகுதியில் உள்ளது. இதையடுத்து மின்மயானம் இங்கு அமைக்க வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, இந்த பகுதியில் மின்மயானம் அமைக்கப்படும் என உறுதி அளித்தார். அதன்படி மின்மயானம் அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. முடிவில் தற்போது நகராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு இருக்கும் பகுதியில் மின்மயானம் அமைப்பது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குப்பைக்கிடங்கு இருக்கும் இடத்தின் ஒரு பகுதியில் குப்பைகளை தரம் பிரிக்கும் கட்டிடத்திற்கு அருகில் கட்டிடம் கட்ட இடம் ஒதுக்கப்பட்டது. அதன்படி ரூ.86 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கின. இந்த பணிகள் தொடங்கியது முதல் ஆமைவேகத்தில் தான் நடைபெற்று  வருகின்றன. 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் கட்டிடம் கட்டும் பணி முடிவடையாத அவல நிலையில் உள்ளது.

இந்த மின்மயானத்தை உடனடியாக கட்டி, அதற்கு தேவையான எந்திரங்களை பொருத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Next Story