கடலூர், விருத்தாசலம், சி.முட்லூரில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்
கடலூர், விருத்தாசலம், சி.முட்லூரில் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
கடலூர்,
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தேர்வு கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து கடலூர் தேவனாம்பட்டினம் பெரியார் அரசு கல்லூரி மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தவிர நுண்ணுயிரியல் துறை தலைவர் நிர்மல்குமார் இட மாற்றம் செய்யப்பட்டதை கண்டித்தும் அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
நேற்று 3-வது நாளாக மாணவ- மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் கலைந்து சென்றனர்.
இதேபோல் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லூரி மாணவர்களும் நேற்று வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் தேர்வு கட்டண உயர்வை திரும்ப பெற கோரியும், மீண்டும் பழைய தேர்வு கட்டணத்தை அமல்படுத்த கோரியும் கோஷங்களை எழுப்பினர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் மற்றும் கல்லூரி நிர்வாகம் சார்பில் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது உயர் அதிகாரிகளிடம் பேசி தீர்வு காண்பதாக அவர்கள் உறுதியளித்தனர். இதை ஏற்ற மாணவர்கள் தேர்வு கட்டண உயர்வை திரும்ப பெறாவிட்டால் மீண்டும் பல கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என அறிவித்து விட்டு கலைந்து சென்றனர்.
புவனகிரி அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகளும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் தேர்வு கட்டணத்தை உயர்த்தியதை கண்டித்து வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் கல்லூரி முதல்வர் சாந்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது உங்களின் கோரிக்கைகளை கல்வித்துறை அமைச்சருச்கு தெரியபடுத்துவதாக கூறினார். இதை கேட்ட மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story