மாவட்டத்தில் 2 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை
விழுப்புரம் மாவட்டத்தில் 2 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை.
விழுப்புரம்,
டீசல் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு போன்றவற்றால் லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசின் புதிய மோட்டார் வாகன சட்டம், லாரி தொழிலை அடியோடு நசுக்கும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக மோட்டார் வாகன விதிமீறல்களுக்கு அதிகமாக அபராத தொகை விதிக்கப்படுகிறது.
எனவே இதனை மத்திய அரசு மறு பரிசீலனை செய்து குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தம் 7 ஆயிரம் லாரிகள் உள்ளன. மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி நேற்று 2 ஆயிரம் லாரிகள் மட்டும் ஓடவில்லை.
இதனால் அந்த லாரிகள் அனைத்தும் மாநில நெடுஞ்சாலை மற்றும் தேசிய நெடுஞ்சாலையோரங்களில் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மற்ற 5 ஆயிரம் லாரிகள் வேலை நிறுத்தத்தில் பங்கேற்காததால் அவை வழக்கம்போல் ஓடின. விழுப்புரம் பகுதியில் உள்ள லாரிகள், எல்லீஸ்சத்திரம் சாலையில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்தன.
லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வரக்கூடிய காய்கறி லோடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு வரக்கூடிய சரக்குகள், மாவட்டத்தின் ஒரு சில இடங்களில் மட்டும் வரவில்லை. ஆனால் லாரிகள் வேலை நிறுத்தத்தினால் விழுப்புரம் மாவட்டத்தில் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story