கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் வெளிச்சந்தையில் குறைந்த விலைக்கு நெல் விற்பனை செய்யும் விவசாயிகள்
நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படாததால் வெளிச்சந்தையில் குறைந்த விலைக்கு நெல்லை விவசாயிகள் விற்பனை செய்து வருகிறார்கள். எனவே கொள்முதல் நிலையங்களை உடனடியாக திறக்கவும், 22 சதவீத ஈரப்பதம் வரை கொள்முதல் செய்யவும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தஞ்சாவூர்,
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் (தஞ்சை, நாகை, திருவாரூர்) விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இதற்காக மேட்டூர் அணை டெல்டா பாசனத்துக்கு ஜூன் மாதம் 12-ந்தேதி திறக்கப்படும். வழக்கமாக திறக்கப்படும் தேதியில் மேட்டூர் அணை திறக்கப்பட்டால் குறுவை சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும். தாமதமாக திறந்தால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்து சம்பா சாகுபடி பரப்பளவு அதிகரிக்கும்.
ஆனால் 8 ஆண்டுகளாக மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியில் திறக்கப்படாததால் குறுவை சாகுபடி எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை. ஆழ்துளை கிணறுகள் மூலம் மட்டுமே குறுவை சாகுபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் கடந்த 2 ஆண்டுகளாக சம்பா, தாளடி சாகுபடியும் எதிர்பார்த்த அளவு நடைபெறவில்லை.
இந்த ஆண்டும் அணை தாமதமாக திறக்கப்பட்டதால் குறுவை சாகுபடி பரப்பளவு குறைந்தது. வழக்கமாக தஞ்சை மாவட்டத்தில் 45 ஆயிரம் எக்டேரில் குறுவை சாகுபடி நடைபெறும். ஆனால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி ஆழ்துளை கிணறுகள் மூலம் 37ஆயிரத்து 700 எக்டேரில் நடைபெற்றது. டெல்டா மாவட்டங்களில் 1 லட்சத்து 40 ஆயிரம் எக்டேருக்கு பதில் 1 லட்சம் எக்டேரில் குறுவை சாகுபடி நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த மாதம் (ஆகஸ்டு) 13-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததும், அங்கிருந்து 17-ந்தேதி முதல் காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் மற்றும் கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் தற்போது டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் சம்பா, தாளடி சாகுபடி பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தற்போது குறுவை அறுவடை பணிகள் தஞ்சை, ஒரத்தநாடு, திருவையாறு, பாபநாசம், அம்மாப்பேட்டை, கும்பகோணம், திருவிடைமருதூர் உள்ளிட்ட பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதே போல் திருவாரூர், நாகை மாவட்டத்திலும் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. தஞ்சை மாவட்டத்தில் 20 ஆயிரம் எக்டேருக்கு மேல் குறுவை அறுவடை பணிகள் நடைபெற்றுள்ளன.
இந்த நிலையில் டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குறுவை அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் வயல்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் எந்திரம் மூலம் அறுவடை செய்வது தாமதமாகி வருகிறது. மேலும் அறுவடை செய்த நெல்லில் ஈரப்பதம் அதிகமாக உள்ளது. இதனால் வெளிச்சந்தையில் நெல்லை விவசாயிகள் விற்பனை செய்து வருகிறார்கள். வெளிச்சந்தையில் 60 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை நெல் ரூ.950 முதல் ரூ.980 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. குவிண்டால் ரூ.1,500 முதல் ரூ.1600 வரை விலை போகிறது.
அரசு கொள்முதல் நிலையங்களில் குவிண்டால் ஏ கிரேடு ரூ.1,840- க்கும், பொது ரகம் ரூ.1,800- க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. தற்போது அதை விட குறைவாக விவசாயிகள் நெல்லை விற்பனை செய்து வருகிறார்கள். தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அரசு கொள்முதல் நிலையங்கள் போதுமான அளவு திறக்கப்படாததாலும் வெளிச்சந்தையில் தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்ய வேண்டிய நிலை விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்க மாநில துணைத்தலைவர் சுகுமாறன் கூறுகையில், Òதற்போது குறுவை அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் மழை பெய்து வருவதால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கிடையே அறுவடை செய்து வருகிறார்கள். ஆனால் அறுவடை செய்த நெல்லை விற்பனை செய்ய போதுமான கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை.
இதனால் வெளிச்சந்தையில் குறைவாக விலைக்கு விற்பனை செய்து வருகிறோம். மழை பெய்வதால் நெல்லில் ஈரப்பதமும் அதிகமாக உள்ளது. மேலும் வியாபாரிகள் அறுவடை செய்யும் பகுதிக்கே வந்து கொள்முதல் செய்து செல்கிறார்கள். இதனால் விவசாயிகள் இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை என தனியாரிடம் விற்பனை செய்கிறார்கள். எனவே நெல்கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறக்க வேண்டும். குவிண்டாலுக்கு ரூ.200 கூடுதலாக ஊக்கத்தொகை வழங்கி கொள்முதல் செய்ய வேண்டும். 22 சதவீதம் வரை ஈரப்பதம் கொண்ட நெல்லையும் கொள்முதல் செய்யலாம் என அரசு அறிவிக்க வேண்டும்Ó என்றார்.
Related Tags :
Next Story