காலாண்டு தேர்வு எழுத மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் நூதன போராட்டம்


காலாண்டு தேர்வு எழுத மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 20 Sept 2019 4:15 AM IST (Updated: 19 Sept 2019 10:36 PM IST)
t-max-icont-min-icon

கடமலைக்குண்டு அருகே, காலாண்டு தேர்வு எழுத மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல் நூதன போராட்டம் நடத்திய பெற்றோர், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியையை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கடமலைக்குண்டு,

கடமலைக்குண்டு அருகே குமணன்தொழு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் தலைமை ஆசிரியர் மற்றும் 5 ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் பள்ளியில் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கூறி இங்கு பணியாற்றிய ஆசிரியையான பத்மாவதி என்பவர் கடந்த மாதம் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

அந்த ஆசிரியையை மீண்டும் குமணன்தொழு தொடக்கப்பள்ளிக்கே மாற்ற வேண்டும் என்று பள்ளி மாணவ-மாணவிகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் சார்பில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த பள்ளியில் நேற்று காலாண்டு தேர்வுகள் தொடங்கியது.

ஆனால் மாணவ-மாணவிகள் யாரும் பள்ளிக்கு வரவில்லை. இதையடுத்து பள்ளி நிர்வாகிகள் விசாரித்த போது, மாணவ-மாணவிகளின் பெற்றோர் அவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் அப்பகுதியில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைத்து நூதன போராட்டம் நடத்துவது தெரியவந்தது. மேலும் அவர்களுக்கு ஆதரவாக அப்பகுதி பொதுமக்களும் போராட்டத்தில் கலந்துகொண்டது தெரியவந்தது. இதையடுத்து மயிலாடும்பாறை வட்டார கல்வி அலுவலர் சரஸ்வதிக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின்னர் வட்டார கல்வி அலுவலர் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பள்ளியின் தலைமை ஆசிரியையின் செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை. இதனாலேயே பள்ளிக்கு மாணவ-மாணவிகள் சேர்க்கை குறைந்து போனது.

எனவே அவரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய வேண்டும். மேலும் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியையை மீண்டும் இதே பள்ளிக்கு மாற்ற வேண்டும் அல்லது புதிய ஆசிரியை நியமிக்கப்பட வேண்டும் என பெற்றோர், பொதுமக்கள் தெரிவித்தனர். பின்னர் பேசிய வட்டார கல்வி அலுவலர், பள்ளி தலைமை ஆசிரியையின் செயல்பாடுகள் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு அவரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

அத்துடன் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் பட்சத்தில் புதிய ஆசிரியர் நியமனம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்ட பெற்றோர், மாணவ-மாணவிகளை தேர்வு எழுத பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். பெற்றோர், பொதுமக்கள் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story