அ.வெள்ளோடு பெரிய கண்மாயில் 50 அடி ஆழத்தில் மண் அள்ளும் மர்ம கும்பல் - நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்


அ.வெள்ளோடு பெரிய கண்மாயில் 50 அடி ஆழத்தில் மண் அள்ளும் மர்ம கும்பல் - நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம்
x
தினத்தந்தி 20 Sept 2019 3:45 AM IST (Updated: 19 Sept 2019 10:57 PM IST)
t-max-icont-min-icon

அ.வெள்ளோடு பெரிய கண்மாயில் சுமார் 50 அடி ஆழத்தில் மண்ணை மர்ம கும்பல் அள்ளி செல்கிறது.

சின்னாளப்பட்டி, 

திண்டுக்கல் அருகே அ.வெள்ளோடு கிராமத்தில் இருந்து சிறுநாயக்கன்பட்டிக்கு செல்லும் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான பெரிய கண்மாய் உள்ளது. சிறுமலையில் பெய்யும் மழை நீர் பெரிய ஓடை வழியாகவும், நரசிங்கபுரம் ஓடை வழியாகவும் கண்மாய்க்கு வந்து சேருகிறது.

கண்மாயை சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுமலைப் பகுதியில் போதிய மழை இல்லாததால் கண்மாய்க்கு நீர் வரத்து இல்லை. நரசிங்கபுரம் வழியாக வரும் ஓடை தண்ணீர் தான் கண்மாய்க்கு வந்தது. இதனால் கண்மாய் நிரம்பவில்லை.

இதனிடையே இந்த குளத்தில் உள்ள வண்டல் மற்றும் களிமண் ஆகியவற்றை அவ்வப்போது பொக்லைன் எந்திரம் மூலம் ஒரு கும்பல் டிப்பர் லாரிகளில் கொண்டு செல்வது வாடிக்கையாக உள்ளது. கடந்த 2 மாதங்களாக குளத்தில் உள்ள மண்ணை அந்த மர்ம கும்பலை சேர்ந்தவர்கள் அள்ளி செல்கின்றனர். இதனால் குளத்தில் ஆங்காங்கே 30 அடி முதல் 50 அடி ஆழம் வரை பள்ளங்களாக காட்சி அளிக்கிறது. காரணம் கால்சியம் சத்து உள்ள மண் கிடைப்பதால் அதிக ஆழத்தில் தோண்டி மண் அள்ளி செல்வது தெரியவந்துள்ளது.

இந்த குளத்தில் அதிக அளவு மண் அள்ளுவதால் நிலத்தடி நீர் பாதிக்கும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே குளத்தில் மண் அள்ளுவதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்ய வேண்டும். மேலும் தொடர்ந்து மண் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story