புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து வேலைநிறுத்தம்: திண்டுக்கல்லில், 4,500 லாரிகள் ஓடவில்லை


புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து வேலைநிறுத்தம்: திண்டுக்கல்லில், 4,500 லாரிகள் ஓடவில்லை
x
தினத்தந்தி 20 Sept 2019 4:15 AM IST (Updated: 19 Sept 2019 10:57 PM IST)
t-max-icont-min-icon

புதிய மோட்டார் வாகன சட்டத்தை எதிர்த்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் திண்டுக்கல்லில், 4 ஆயிரத்து 500 லாரிகள் ஓடாததால் ரூ.10 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது.

திண்டுக்கல், 

மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்தியது. இதன்மூலம் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் லாரி ஓட்டுனர்களுக்கு 10 மடங்கு அபராத தொகை விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகையை குறைக்க வேண்டும். நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நேற்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தது.

அதன்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இந்தியா முழுவதும் லாரிகள் ஓடவில்லை. இந்த போராட்டத்திற்கு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம், டிப்பர் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் உள்ளிட்ட பல லாரி சங்கங்கள் ஆதரவு தெரிவித்தன.

திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. வேலை நிறுத்தம் காரணமாக வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து லாரிகளும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பொருட்கள் அனைத்தும் தேக்கம் அடைந்துள்ளன.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட அனைத்து லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் எல்லப்பன் கூறுகையில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தினால் லாரி உரிமையாளர்கள், டிரைவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அபராத தொகையை குறைக்க வேண்டும். நாளுக்கு நாள் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.

இதனால் டீசலை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வரவேண்டும். அவ்வாறு கொண்டு வந்தால் டீசல் விலையை கட்டுப்படுத்த முடியும். நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் அனைவரும் நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் 4 ஆயிரத்து 500 லாரிகள் ஓடவில்லை. இதனால் ரூ.10 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story