மசினகுடி அருகே, சீகூர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது


மசினகுடி அருகே, சீகூர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது
x
தினத்தந்தி 20 Sept 2019 3:45 AM IST (Updated: 19 Sept 2019 11:24 PM IST)
t-max-icont-min-icon

மசினகுடி அருகே உள்ள சீகூர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மசினகுடி,

முதுமலை புலிகள் காப்பகத்துக்குள் மசினகுடி அமைந்து உள்ளது. மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மழையால் வனப்பகுதியில் உள்ள ஓடைகள், ஆறுகள், குளம், குட்டைகள், ஏரிகள் என அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. மேலும் வனப்பகுதி பச்சை பசேல் என காட்சியளிப்பதுடன், வனவிலங்குகளுக்கு தேவையான பசுந்தீவனமும் அதிகரித்து உள்ளது. இதனால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் குறைந்து உள்ளது. இது வனத்துறையினரை நிம்மதியடைய செய்துள்ளது.

இந்த நிலையில் மசினகுடி அருகே மாயார் பகுதியில் உள்ள சீகூர் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இது சுற்றுலா பயணிகளை கவர்ந்து இழுக்கிறது. சுமார் 1000 அடி உயரம் கொண்ட அந்த நீர்வீழ்ச்சி அமைந்திருக்கும் பகுதிக்கு செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது.

ஆனால் அந்த நீர்வீழ்ச்சியை தொலைவில் இருந்து காணும் வகையில் மசினகுடி வனத்துறையினர் சார்பில் காட்சிமுனை அமைக்கப்பட்டு உள்ளது. அதிலிருந்து சுற்றுலா பயணிகள் நீர்வீழ்ச்சியை கண்டு மகிழ்கின்றனர்.மசினகுடி வனத்துறை அலுவலகத்தில் இருந்து சீகூர் நீர்வீழ்ச்சியை காண தனியார் ஜீப்புகள் மூலம் காட்சிமுனைக்கு சுற்றுலா பயணிகள் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதற்கு ரூ.2 ஆயிரத்து 500 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சுற்றுலா பயணிகள் தங்களது சொந்த வாகனங்களில் காட்சிமுனைக்கு செல்ல அனுமதி கிடையாது. காட்சிமுனையில் இருந்து நீர்வீழ்ச்சியை காணும்போது, வெள்ளியை உருக்கி கொட்டுவது போல தண்ணீர் விழுவது ரம்மியமாக இருக்கும். அதனை சுற்றுலா பயணிகள் தங்களது செல் போனில் புகைப்படம் எடுத்து மகிழ்வதையும் காண முடிகிறது.

Next Story