கோலார் மாவட்டத்தில் வீடு புகுந்து திருடுவதை தடுக்க புதிய திட்டம் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ரெட்டி பேட்டி


கோலார் மாவட்டத்தில் வீடு புகுந்து திருடுவதை தடுக்க புதிய திட்டம் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ரெட்டி பேட்டி
x
தினத்தந்தி 20 Sept 2019 3:00 AM IST (Updated: 20 Sept 2019 12:59 AM IST)
t-max-icont-min-icon

கோலார் மாவட்டத்தில் வீடு புகுந்து திருடுவதை தடுக்க புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ரெட்டி கூறினார்.

கோலார் தங்கவயல்,

கோலார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ரெட்டி நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோலார் மாவட்டத்தில் முதல் முறையாக ‘கோலார் போலீஸ் ஐ (கண்)’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 30 ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் வாங்கப்பட்டுள்ளது. அவைகள் அதிநவீன தொழில்நுட்பங்களுடன், சுழலும் தன்மை கொண்டவை. கோலார் மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீசாரும் இந்த கேமராக்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இந்த கேமராக்களின் முக்கிய அம்சம் என்னவென்றால், வீடு புகுந்து திருடுவதை தடுப்பதற்காக இவற்றை பயன்படுத்த உள்ளோம். அதாவது கோலார் மாவட்டத்தில் உள்ள மக்கள் யாரேனும் தங்களுடைய வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்ல திட்டமிட்டால், உடனடியாக அதுபற்றி மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கோ, தங்கள் பகுதிக்கு உட்பட்ட போலீஸ் நிலையத்திற்கோ அல்லது சப்-இன்ஸ்பெக்டருக்கோ தகவல் தெரிவிக்க வேண்டும்.

கேமரா பொருத்தப்படும்

அவ்வாறு தெரிவித்துவிட்டால் சம்பந்தப்பட்டவரின் வீட்டின் முன்பு இந்த கேமரா பொருத்தப்படும். இந்த கேமராவில் 4 செல்போன் எண்களை இணைத்துக் கொள்ளலாம். அதன்மூலம் வீட்டின் உரிமையாளரின் செல்போன் எண், அப்பகுதி சப்-இன்ஸ்பெக்டரின் செல்போன் எண், அப்பகுதியில் இரவு நேர ரோந்து பணியில் ஈடுபடும் போலீஸ்காரரின் செல்போன் எண் மற்றும் காவல் கட்டுப்பாட்டு அறையின் செல்போன் எண் ஆகியவற்றை இணைத்துக் கொள்ளலாம்.

யாரேனும் மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைக்க முயன்றாலோ, அப்பகுதியில் மர்மமான முறையில் சுற்றித்திரிந்தாலோ உடனடியாக இந்த கேமரா படம் பிடித்துவிடும். மேலும் இதுபற்றிய தகவலை, அதில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் எண்களுக்கும் உடனடியாக அனுப்பிவிடும். பின்னர் வீட்டின் உரிமையாளர் வீட்டிற்கு திரும்பிய பிறகு கேமராவை கழற்றிக் கொள்ளலாம். இதன்மூலம் வீடு புகுந்து திருடும் சம்பவங்களை வெகுவாக கட்டுப்படுத்த முடியும். மேலும் குற்றவாளிகளையும் பிடிக்க முடியும்.

இத்திட்டம் வெற்றிபெற்றால்...

இந்த திட்டம் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இத்திட்டம் வெற்றிபெற்றால் மேலும் இதேபோல் பல கேமராக்களை வாங்க முடிவு செய்துள்ளோம். இத்திட்டத்தை போலீசாரும், பொதுமக்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து திருட்டு, கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடித்த போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ரெட்டி பாராட்டி வெகுமதி வழங்கினார். அதாவது கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா சிட்டபெனஜேனஹள்ளி கேட் அருகில் 4 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்தனர். அவர்களை கோலார் புறநகர் போலீசார் பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் சந்திரசேகர்(வயது 24), தனஞ்ஜெயா(20), தீக்சித்(22) மற்றும் குருபிரசாத்(21) என்பதும், அவர்கள் மீது பல்வேறு திருட்டு, கொள்ளை வழக்குகள் இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடமிருந்து தங்க நகைகள், மோட்டார் சைக்கிள்கள் என ரூ.14 லட்சம் மதிப்பிலான பொருட்களை போலீசார் மீட்டனர். மேலும் அவர்களுடைய கூட்டாளிகளான யத்தீஷ், பசவராஜ் ஆகிய 2 பேரையும் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

போலீசாருக்கு வெகுமதி

இதேபோல் கோலார் டவுன் போலீசார் வீடு புகுந்து திருடும் கும்பலை சேர்ந்த சங்கர்(47), என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க நகைகளையும், 2 மோட்டார் சைக்கிள்களையும் போலீசார் மீட்டனர்.

இவ்வாறு திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்களை பிடித்த போலீசாருக்குத்தான், போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ரெட்டி பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார்.

Next Story