மைசூருவில் நடைபெற்று வரும் தசரா விழா பணிகளை மந்திரி வி.சோமண்ணா நேரில் ஆய்வு
மைசூருவில் நடைபெற்று வரும் தசரா விழா பணிகளை மந்திரி வி.சோமண்ணா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மைசூரு,
ஆயுதபூஜையை முன்னிட்டு ஆண்டுதோறும் மைசூருவில் உலகப்புகழ் பெற்ற தசரா விழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதுபோல் இந்த ஆண்டுக்கான தசரா விழா வருகிற 29-ந்தேதி தொடங்கி அக்டோபர் 8-ந்தேதி வரை 10 நாட்கள் சிறப்பாக கொண்டாட கர்நாடக அரசு முடிவு செய்தது.
இதையொட்டி அக்டோபர் 8-ந்தேதி ஜம்புசவாரி ஊர்வலம் நடக்கிறது. இதில் கலந்துகொள்வதற்காக அர்ஜுனா உள்பட 14 யானைகள் மைசூருவுக்கு வந்துள்ளன. மேலும் தசரா விழாவையொட்டி மைசூரு மாநகரை அழகுப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. அதாவது, பழுதடைந்த சாலைகளை சீரமைக்கும் பணி, அரண்மனை, கலெக்டர் அலுவலகம், பாரம்பரிய கட்டிடங்களை சுத்தப்படுத்தி வர்ணம் பூசும் பணிகள், சதுக்கங்கள், பூங்காக்கள், தலைவர்களின் சிலைகள் உள்ள சர்க்கிள்கள் பராமரிக்கப்பட்டு புதுப்பொலிவு பெற்று வருகின்றன. மேலும் முக்கிய வீதிகள், பாரம்பரிய கட்டிடங்கள், அரசு கட்டிடங்களுக்கு மின்விளக்கு அலங்காரமும், தோரணங்கள் கட்டும் பணியும் நடந்து வருகின்றன.
இளைஞர் விழா
தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனையில் தசரா தொடங்கும் 29-ந்தேதி முதல் அக்டோபர் 8-ந்தேதி வரை 10 நாட்களும் தர்பார் மண்டபத்தில், தங்கத்தால் ஆன சிம்மாசனத்தில் அமர்ந்து இளவரசர் யதுவீர் தர்பார் நடத்தி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிவார். இதனால் அரண்மனையில் தசரா விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.
தசரா விழா தொடங்க இன்னும் 8 நாட்களே இருப்பதால் தசரா விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. தசரா விழாவையொட்டி முதல் நிகழ்ச்சியாக இளைஞர் விழா கடந்த 17-ந்தேதி தொடங்கியது. மைசூரு மானஷகங்கோத்திரியில் உள்ள திறந்தவெளி அரங்கில் நடந்து வருகிறது. இதில் 260 கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டுள்ளனர். அவர்கள் நடனம், விளையாட்டு போட்டிகளில் தங்களது திறமைகளை நிரூபித்து வருகிறார்கள். இதில் வெற்றி பெறும் கல்லூரி அணிகள் இளைஞர் தசரா விழாவில் பங்கேற்க உள்ளன.
மந்திரி வி.சோமண்ணா ஆய்வு
இந்த நிலையில் தசரா விழாவுக்கான ஏற்பாடுகளை மாநில வீட்டு வசதித் துறை மந்திரியும், மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரியுமான வி.சோமண்ணா நேற்று திடீரென்று ஆய்வு செய்தார். அவர் மைசூரு அரண்மனையில் நடந்து வரும் தசரா ஏற்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் தசரா விழா தொடங்க இன்னும் 8 நாட்கள் மட்டுமே இருப்பதால் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அங்கிருந்து அவர் ஜம்புசவாரி ஊர்வலம் நடைபெறும் 5 கிலோ மீட்டர் தூரம் வரையிலும் விழா ஏற்பாடுகளை பார்வையிட்டார். இறுதியில் அவர் பன்னிமண்டபத்தில் நடைபெறும் தீப்பந்து விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு மேற்கொண்டார்.
மல்யுத்த வீரர்கள் தேர்வு
அப்போது கலெக்டர் அபிராம் ஜி.சங்கர், தசரா விழா கமிட்டி நிர்வாகிகள் உடன் இருந்தனர். பின்னர் தசரா விழாவையொட்டி பல்வேறு விழா கமிட்டிகளுக்கான தலைவர், உறுப்பினர்களை நியமிக்கும் ஆலோசனை கூட்டம் மந்திரி வி.சோமண்ணா தலைமையில் நடந்தது. இதில் கமிட்டிகளுக்கான தலைவர், உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதற்கிடையே மைசூரு அரண்மனை அருகில் உள்ள தசரா கண்காட்சி வளாகத்தில், குஸ்தி என்னும் மல்யுத்த போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்யும் பணி நேற்று தொடங்கியது. இதில் நூற்றுக்கணக்கான வீரர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story