அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை ருசி பார்த்தார்


அரசு பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை ருசி பார்த்தார்
x
தினத்தந்தி 20 Sept 2019 4:15 AM IST (Updated: 20 Sept 2019 1:36 AM IST)
t-max-icont-min-icon

பர்கூர் மலைப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் மாவட்ட கலெக்டர் கதிரவன் திடீர் ஆய்வு செய்தார். அப்போது அவர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவினை ருசி பார்த்தார்.

அந்தியூர்,

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி தாமரைக்கரைக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று சென்றார். அப்போது அவர் கால்நடை வளர்ப்பு மற்றும் பால் கொள்முதல் பற்றி பொதுமக்களின் கருத்துக்களை கேட்டு அறிந்தார்.

இதையொட்டி அந்தப்பகுதியில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனையை கலெக்டர் கதிரவன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அவர் தேவர்மலையில் உள்ள ஆரம்ப துணை சுகாதார நிலையத்துக்கு சென்று பார்வையிட்டார். அப்போது சுகாதார நிலையத்தில் நோயாளிகளிடம் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.

உணவு சாப்பிட்டார்

இதேபோல் அந்தப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிக்கூடத்திலும் கலெக்டர் ஆய்வு செய்தார். அப்போது மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் மதிய உணவினை கலெக்டர் சாப்பிட்டு ருசி பார்த்தார். பின்னர் அவர், மாணவ-மாணவிகளுக்கு தரமான உணவுகள் வழங்கப்படுவதோடு, சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும் என்று பள்ளிக்கூட நிர்வாகிகளிடம் கூறினார். அதன்பின்னர் ஈரட்டியில் உள்ள ரேஷன் கடையிலும் மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்ததோடு, அங்குள்ள கோப்புகள் மற்றும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களின் இருப்பையும் சரிபார்த்தார்.

அப்போது அவருடன் அந்தியூர் தாசில்தார் மாலதி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர்கள் உமா, கிராம ஊராட்சி ஆணையாளர் பெருமாள் மற்றும் வருவாய் துறையினர், கால்நடை துறையினர் உள்பட அதிகாரிகள் பலர் இருந்தனர்.


Next Story