ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக 1 வயது குழந்தைக்கு குடலில் அறுவை சிகிச்சை


ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக 1 வயது குழந்தைக்கு குடலில் அறுவை சிகிச்சை
x
தினத்தந்தி 20 Sept 2019 4:15 AM IST (Updated: 20 Sept 2019 1:38 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் முதல் முறையாக 1½ வயது குழந்தைக்கு குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ஈரோடு,

ஈரோடு அருகே உள்ள கொங்கம்பாளையம் ஆவுடையான்காடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 28). டிரைவர். இவருடைய மனைவி கல்பனா (26). இவர்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ரித்திகா என்று பெயர் சூட்டினர்.

கடந்த 20 நாட்களுக்கு முன்பு குழந்தை ரித்திகாவுக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. மேலும், சளி தொந்தரவும் அதிகமாக இருந்தது. இதைத்தொடர்ந்து ரஞ்சித்குமாரும், கல்பனாவும் குழந்தையை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அந்த குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்து பார்த்தனர். அப்போது ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, ரித்திகாவின் வயிற்றில் உள்ள குடல், இதயத்துக்கு அருகில் வரை சென்று சுற்றிக்கொண்டு இருப்பதை கண்டு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த குழந்தையை ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக டாக்டர்கள் சேர்த்தனர். மறுநாள் அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

முதல்முறை

அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ரகுராஜா, தங்கதுரை, பிரேம்நவாஸ் மற்றும் டாக்டர்கள் குழுவினர் அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர். அந்த குழந்தை தற்போது நலமுடன் உள்ளது.

அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த டாக்டர்களை ஈரோடு மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் கோமதி, அரசு ஆஸ்பத்திரி கண்காணிப்பாளர் டாக்டர் பிரபாவதி தேவி ஆகியோர் பாராட்டினார்கள்.

இதுகுறித்து இணை இயக்குனர் டாக்டர் கோமதி கூறியதாவது:-

ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் குடலிறக்கம் எனப்படும் ஹெர்னியாவுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால் குழந்தைகளுக்கு இதுவரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில்லை. முதல் முறையாக குழந்தை ரித்திகாவுக்கு குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது.

அறுவை சிகிச்சை

ரித்திகாவுக்கு வயிற்று பகுதியில் ஏற்பட்ட துளை காரணமாக குடல், மார்பு பகுதிக்கு சென்றது. அங்கு இதயத்துக்கு அருகில் குடல் சுற்றி இருந்ததை கண்டுபிடித்தோம். உடனடியாக அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து குடலை வயிற்று பகுதிக்கு இறக்கி சரிசெய்யப்பட்டது. இந்த நோய்க்கு ‘டையபிரமட்டிக் ஹெர்னியா’ என்று ஆங்கிலத்தில் கூறப்படுகிறது. தற்போது குழந்தை மிகவும் நலமுடன் உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story