சென்னை விமான நிலையத்தில் மேற்கூரையில் ஒழுகிய மழைநீர் புகைப்படத்துடன் கனிமொழி எம்.பி. டுவிட்டரில் பதிவு


சென்னை விமான நிலையத்தில் மேற்கூரையில் ஒழுகிய மழைநீர் புகைப்படத்துடன் கனிமொழி எம்.பி. டுவிட்டரில் பதிவு
x
தினத்தந்தி 19 Sep 2019 11:15 PM GMT (Updated: 19 Sep 2019 9:34 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் மேற்கூரையில் இருந்து ஒழுகிய மழைநீரை பிளாஸ்டிக் பாத்திரத்தில் பிடித்து ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். இதை கனிமொழி எம்.பி. புகைப்படத்துடன் தனது டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

ஆலந்தூர்,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்தின் 2-வது தளத்தில் உள்ள புறப்பாடு பகுதியில் பயணிகளுக்கு பாதுகாப்பு சோதனைகள் நடக்கும் பாதுகாக்கப்பட்ட இடங்களில் உள்ள மேற்கூரையில் இருந்து மழைநீர் ஒழுகியது.

இவ்வாறு ஒழுகும் மழைநீரை விமான நிலைய ஊழியர்கள் பிளாஸ்டிக் பாத்திரங்கள் வைத்து பிடித்து, வெளியே கொண்டுபோய் கொட்டினர்.

கனிமொழி எம்.பி.

நேற்று அதிகாலை டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலைய உள்நாட்டு முனையத்துக்கு வந்த தி.மு.க. எம்.பி. கனிமொழி, இந்த காட்சியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மழைநீரை பிளாஸ்டிக் பாத்திரங்களில் பிடிக்கும் காட்சியை தனது செல்போனில் படம் பிடித்து, டுவிட்டர் மற்றும் முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

அதில் அவர், “சென்னை விமான நிலையத்தில் முன்பு மேற்கூரை இடிந்து விழுந்தது. தற்போது மேற்கூரை ஷவராக மாறிவிட்டது. மழைநீரை பிளாஸ்டிக் பாத்திரத்தில் பிடிக்கின்றனர்” என பதிவிட்டு இருந்தார்.

இதுபற்றி சென்னை விமான நிலைய இயக்குனர் ஸ்ரீகுமாரிடம் கேட்டபோது, “விமான நிலையத்தின் மேற்பகுதியில் சிமெண்டு தளம் கிடையாது. வெறும் சீட்டுகள்தான் போடப்பட்டுள்ளது. அதில் ஒருசில இடங்களில் இதுபோல் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.

அந்த இடங்களை கண்டுபிடித்து சரி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளோம். ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும்” என்றார்.

Next Story