பாதை பராமரிப்பு பணியால் சிவகாசியில் நிறுத்தப்படும் செங்கோட்டை பயணிகள் ரெயிலை விருதுநகர் வரை நீட்டிக்க வேண்டும்


பாதை பராமரிப்பு பணியால் சிவகாசியில் நிறுத்தப்படும் செங்கோட்டை பயணிகள் ரெயிலை விருதுநகர் வரை நீட்டிக்க வேண்டும்
x
தினத்தந்தி 20 Sept 2019 4:00 AM IST (Updated: 20 Sept 2019 3:55 AM IST)
t-max-icont-min-icon

ரெயில்பாதை பராமரிப்பு பணியால் சிவகாசியில் நிறுத்தப்படும் செங்கோட்டை பயணிகள் ரெயிலை விருதுநகர் வரை நீட்டிக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

விருதுநகர், 

மதுரையில் இருந்து செங்கோட்டை வரையிலான அகல ரெயில் பாதையில் இயக்கப்படும் பயணிகள் ரெயில் விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் பகுதி மக்களுக்கு பெரிதும் பயன் அளிப்பதாக இருந்து வருகிறது. அதிலும் பஸ்சை விட இந்த ரெயிலில் கட்டணம் குறைவாக இருப்பதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் ரெயில் பயணத்தையே பயன்படுத்தும் நிலை இருந்து வருகிறது.

இந்தநிலையில் ரெயில்பாதை பராமரிப்பு பணிகளால் மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகம் பயணிகள் ரெயில் போக்குவரத்தில் மாற்றம் செய்துள்ளது. அதில் மதுரை-செங்கோட்டை பயணிகள் ரெயில், மதுரைக்கு பதிலாக விருதுநகரில் இருந்து செயல்படும் என முதலில் அறிவிக்கப்பட்டது. இந்த மாற்றத்தின்போது விருதுநகர் ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர்கள் வருகையில் தாமதம் ஏற்பட்டதால் குறிப்பிட்ட நேரத்தில் இந்த பயணிகள் ரெயில் புறப்படாத நிலையில் பிரச்சினை ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது செங்கோட்டை பயணிகள் ரெயில் சிவகாசியிலேயே நிறுத்தப்பட்டு அங்கிருந்து செங்கோட்டைக்கு புறப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வழக்கமாக பெங்களூரு, சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் வரும் பயணிகள் சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் செல்வதற்கு விருதுநகர் ரெயில் நிலையத்தில் இறங்கி செங்கோட்டை பயணிகள் ரெயிலில் தான் செல்வது வழக்கம்.

ஆனால் தற்போது இந்த ரெயில் சிவகாசியுடன் நிறுத்தப்பட்டு விட்டதால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இருந்து வரும் பயணிகள் மாவட்டத்தின் மேற்கு பகுதிக்கு செல்வதற்கு பஸ்களில் செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பெரும் தவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

செங்கோட்டையில் இருந்து விருதுநகர் வரை உள்ள ரெயில் பாதையில் பராமரிப்பு பணிகள் ஏதும் நடைபெறாத நிலையில் மதுரை-செங்கோட்டை ரெயிலை சிவகாசியோடு நிறுத்தி விடாமல், விருதுநகர் வரை நீட்டித்து இங்கிருந்து புறப்பட்டு செல்லும் வகையில் ஏற்பாடு செய்தால் அதிக ரெயில் பயணிகளுக்கு பயன் உள்ளதாக அமையும். ரெயில்வே துறையின் நோக்கமே பொதுமக்களுக்கு கூடுதல் ரெயில் வசதிகளை செய்து தர வேண்டும் என்பது தான். இவ்வாறு இருக்கையில் வாய்ப்புள்ள வசதியையும் மறுக்கும் வகையில் செங்கோட்டை பயணிகள் ரெயிலை சிவகாசியோடு நிறுத்தி விடுவது ஏற்புடையது அல்ல.

எனவே மதுரை-விருதுநகர் இடையே ரெயில்பாதை பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மதுரை-செங்கோட்டை பயணிகள் ரெயிலை விருதுநகரில் இருந்து புறப்பட்டு செல்ல கோட்ட ரெயில்வே நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

மதுரை-விருதுநகர் இடையே அனைத்து எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்பட்டு வரும் நிலையில் செங்கோட்டை பயணிகள் ரெயிலுக்கு மட்டும் போக்குவரத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றத்தை தவிர்க்க வாய்ப்பு இருந்தால் அதனையும் கோட்ட ரெயில்வே நிர்வாகம் பரிசீலிக்க வேண்டியது அவசியம் ஆகும்.

Next Story