அழகர்கோவில் பகுதியில் கல்லூரி அருகில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


அழகர்கோவில் பகுதியில் கல்லூரி அருகில் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 Sept 2019 4:15 AM IST (Updated: 20 Sept 2019 3:55 AM IST)
t-max-icont-min-icon

அழகர்கோவில் அருகில் உள்ள கல்லூரி பகுதியில் டாஸ்மாக் கடையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை, 

மதுரை அழகர்கோவில் நாயக்கன்பட்டி பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சரவணன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நாயக்கன்பட்டியில் எங்கள் கல்லூரியும், அதன் அருகிலேயே போதை மறு வாழ்வு மையமும் உள்ளன. எங்கள் கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்குள்ள விடுதியில் 120 மாணவர்கள் தங்கியுள்ளனர். மறுவாழ்வு மையத்தில் 60 நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். போதை மறுவாழ்வு மையத்தின் அருகே டாஸ்மாக் கடை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குடி போதையில் இருந்து மீட்பவர்களுக்கான மறு வாழ்வு மையம் அருகிலேயே டாஸ்மாக் கடை திறப்பது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தும். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படவும் வாய்ப்புள்ளது.இதனால் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் போதை மறுவாழ்வு மையம் அருகே டாஸ்மாக் கடை, மதுபான கூடம் திறக்கவோ, வேறு இடங்களில் இருந்து இடமாற்றம் செய்யவோ தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த ஐகோர்ட்டு, இந்த விஷயத்தில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம், தாரணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் ஆர்.காந்தி ஆஜராகி, “டாஸ்மாக் கடைகளால் ஏற்படும் இன்னல்களை கருத்தில் கொள்ளாமல், அதன்மூலம் வரும் வருமானத்தை மட்டுமே அரசு கவனத்தில் கொள்வதை ஏற்க இயலாது“ என்று வாதாடினார். அதற்கு அரசு வக்கீல் ஆஜராகி, “மனுதாரர் கூறுவதை போல கல்லூரி மற்றும் போதை மறுவாழ்வு மையத்தின் அருகில் டாஸ்மாக் கடை அமையவுள்ள கட்டிடம் இல்லை. விதிகளை பின்பற்றி உரிய தூரத்தில் தான் அமைகிறது” என்று தெரிவித்தார்.

இதை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். பின்னர், “கல்லூரி மற்றும் போதை மறுவாழ்வு மையம் அருகில் டாஸ்மாக் கடை தொடங்கவோ, வேறு இடத்தில் இருந்து இந்த பகுதிக்கு இடமாற்றம் செய்யவோ அனுமதிக்கக்கூடாது. விதிகளை பின்பற்றி வேறு இடத்துக்கு இந்த டாஸ்மாக் கடையை மாற்ற வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

Next Story