வேலை நிறுத்தம் எதிரொலி: மதுரையில் 7,500 லாரிகள் ஓடவில்லை
புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் எதிரொலியாக மதுரையில் 7,500 லாரிகள் ஓடவில்லை.
மதுரை,
திருத்தப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்தில் லாரி உரிமையாளர் பாதிக்கப்படும் வகையில் பல்வேறு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மேலும் சாலை விதி மீறல்களுக்கான அபராத தொகையும் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதை குறைக்க வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் சார்பில் ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதன் காரணமாக நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நாடு முழுவதும் லாரிகள் இயக்கப்படவில்லை. இந்த போராட்டம் மதுரையிலும் எதிரொலித்தது. இதனால் மதுரையில் உள்ள 7,500 லாரிகள் நேற்று ஓடவில்லை. அனைத்து லாரிகளும் கீழவாசல், மணலூர், கோச்சடை உள்ளிட்ட பகுதிகளிலும், சாலையோரங்களிலும் நிறுத்தப்பட்டு இருந்தன.
இதுகுறித்து மதுரையை சேர்ந்த லாரி உரிமையாளர் சம்மேளனத்தின் மாநில துணை தலைவர் சாத்தையா கூறும்போது, திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். எங்களது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், காலவரையற்ற போராட்டம் நடத்துவது குறித்து அகில இந்திய நிர்வாகிகளுடன் பேசி முடிவெடுக்கப்படும்.
குறிப்பாக விதிமீறல்களில் ஈடுபடுவோருக்கு அதிக அளவில் அபராதம் விதிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக பழைய அபராத கட்டணத்தை வசூலிக்கும் வகையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். இதுபோல், சுங்க சாவடிகளிலும் அதிக அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தால் மதுரை வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்ட 7,500 லாரிகள் இயக்கப்படவில்லை. இதுபோல் மற்ற மாநிலம் மற்றும் மாவட்டங்களில் இருந்து மதுரைக்கு வந்த லாரிகளும் இயக்கப்படவில்லை. இதனால், சுமார் ரூ.150 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 30 ஆயிரம் தொழிலாளர்களின் வருமானமும் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
Related Tags :
Next Story