ஆவணங்கள் திருட்டு, பதவி உயர்வில் விதிமீறல்: கலெக்டர் அறை முன்பு அமர்ந்து ஊழியர்கள் போராட்டம்


ஆவணங்கள் திருட்டு, பதவி உயர்வில் விதிமீறல்: கலெக்டர் அறை முன்பு அமர்ந்து ஊழியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 20 Sept 2019 3:45 AM IST (Updated: 20 Sept 2019 3:55 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் ஆவணங்கள் திருடப்படுவதாகவும், பதவி உயர்வு வழங்குவதில் விதிமீறல் நடப்பதாகவும் கூறி கலெக்டர் அறை முன்பு அமர்ந்து ஊழியர்கள் போராட்டம் நடத்தினர்.

மதுரை,

மதுரை மாவட்ட வருவாய்த்துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பணி உயர்வு வழங்குவதில் குரூப்-2 நேரடி நியமனத்தில் பணிக்கு வந்தவர்களுக்கும், மற்ற ஊழியர்களுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. குறிப்பாக துணை தாசில்தார் நியமனத்தில் இருதரப்பு ஊழியர்களுக்கும் மோதல் போக்கு உள்ளது. இது தொடர்பாக ஐகோர்ட்டிலும் வழக்கு போடப்பட்டு உள்ளது.

இந்த பிரச்சினை காரணமாக 26 பேருக்கு கிடைக்க வேண்டிய துணை தாசில்தார் பதவி கடந்த 2018-ம் ஆண்டு முதல் கிடப்பில் உள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு வருவாய் துறை குரூப்-2 நேரடி நியமன அலுவலர்கள் சங்கம் சார்பில் அதன் ஊழியர்கள் நேற்று கலெக்டர் அறை முன்பு முற்றுகையிட்டு அமர்ந்து திடீர் போராட்டம் நடத்தினர். அதாவது பணி உயர்வு தொடர்பாக ரகசிய ஆவணங்களை, கலெக்டர் அலுவலகத்தில் பணியில் இல்லாதவர்கள் முறைகேடாக திருடி செல்வதாக குற்றம் சுமத்தினர். எனவே கலெக்டர் தலையீட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதே வேளையில் தமிழ்நாடு வருவாய் துறை சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அமலுக்கு வராத அரசாணையின் அடிப்படையில் குரூப்-2 மூலம் நேரடி நியமனம் மூலம் பதவி உயர்வு பெற்றுள்ளனர். எனவே இந்த பதவி உயர்வு மற்றும் பணி மூப்பு பட்டியல் தயாரிப்பில் விதிமீறல் நடந்து உள்ளது. எனவே அவர்களுக்கு வழங்கப்பட்ட பணி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இருதரப்பினரும் கலெக்டரை சந்தித்து தங்களது கோரிக்கைகள் அடங்கிய மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் ராஜசேகர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Next Story