அரக்கோணத்தில் விடிய, விடிய பலத்த மழை: 4 வீடுகள் இடிந்து விழுந்தது


அரக்கோணத்தில் விடிய, விடிய பலத்த மழை: 4 வீடுகள் இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 20 Sept 2019 3:45 AM IST (Updated: 20 Sept 2019 3:55 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணத்தில் விடிய, விடிய பலத்த மழை பெய்ததில் 4 வீடுகள் இடிந்து விழுந்தது. குடிசைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியே வராமல் தவித்தனர்.

அரக்கோணம், 

அரக்கோணம் நகரம் மற்றும் தாலுகா பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை விடிய, விடிய பலத்த மழை பெய்தது.

அரக்கோணம் நகரத்தில் உள்ள சாலைகளில் ஆறு போல் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக அரக்கோணம் நேருஜி நகர், டவுன் ஹால் தெரு, ராஜாஜி முதல் தெரு, திருத்தணி சாலை பகுதிகளில் மழை வெள்ளம் தாழ்வான பகுதியில் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் தூங்கி கொண்டிருந்தவர்கள் எழுந்து தண்ணீர் வீட்டிற்குள்ளே வராமல் தடுத்து, உள்ளே புகுந்த தண்ணீரை வெளியேற்றினர்.

அரக்கோணம் ஆதி திராவிடர் நலப்பள்ளி, அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி, காந்திநகர் நகராட்சி பள்ளி, பழனிப்பேட்டை இரட் டைகண் பாலம் பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. இதனால் பழனிப் பேட்டை பாலத்தை கடப் பதற்கு வாகன ஓட்டிகள் மிக வும் சிரமப்பட்டனர். பள்ளி வளாகத்தில் மாணவர்கள் மழைநீரை கடந்து மிகவும் சிரமப்பட்டு வகுப்பறைக்குள் சென்றனர்.

இந்த பிரச்சினைகள் குறித்து நடவடிக்கை எடுக்க சு.ரவி எம்.எல்.ஏ., தாசில்தார் ஜெயக் குமார் ஆகியோர் நகராட்சி ஆணையாளர் முருகேசனிடம் தொடர்பு கொண்டு தேவையான நடவடிக்கை எடுக்கும்படி கூறினர்.

அதைத்தொடர்ந்து நக ராட்சி ஆணையாளர் முருகேசன் தலைமையில் பொறியாளர் சண்முகம், மேலாளர் கோபிநாத், சுகாதார அலுவலர் அருள்செல்வதாஸ் மற்றும் ஊழியர்கள் மழைநீர் தேங்கி இருந்த தெருக்களுக்கு சென்று அடைப்புகளை நீக்கி மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். சில பகுதிகளில் குழாய் மூலமாக தண்ணீரை உறிஞ்சி டேங்கர் லாரி மூலமாக மழைநீரை அகற்றினார்கள்.

அரக்கோணம், அம்பேத்கர் நகர் பகுதியில் 3 வீடுகள் இடிந்து விழுந்தது. மேலும் தாலுகா பகுதியில் அணைக் கட்டாபுதூர் கிராமம் பிள்ளை யார் கோவில் தெருவில் உள்ள மாடசாமி என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. அரக்கோணம், பெருமுச்சு காலனி பகுதியில் மழைவெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது.

அரக்கோணம் அருகே சித்தூர் கிராமத்தில் இருளர் காலனியில் 19 குடிசைகளை சுற்றி மழை வெள்ளம் சூழ்ந்து கொண்டதால் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர். சம்பவ இடங்களுக்கு அரக்கோணம் தாசில்தார் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் சென்று மழைநீர் சூழ்ந்து இருந்ததை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அரக்கோணம் -காஞ்சீபுரம் சாலையில் கல்லாற்றில் தண்ணீர் இல்லாமல் இருந்து வந்தது. தற்போது பெய்த மழையினால் கல்லாற்றில் வெள்ளம் செல்வதால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மழைநீரில் இறங்கி ஆட்டம் போட்டனர்.

அரக்கோணம் ரெயில்வே பணிமனையின் பின்பகுதியில் இருந்து கீழ்க்குப்பம் வரை செல்லும் சாக்கடை நீர் மற்றும் மழைநீர் செல்லும் கால்வாய் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு உள்ளது. சுமார் 4 கிலோ மீட்டர் செல்லும் அந்த கால்வாயின் இருபுறமும் மரம், செடி, முட்புதர்கள் அதிகமாக வளர்ந்து உள்ளதால் கழிவுநீர் மெதுவாக சென்றது. அரக்கோணம் நகராட்சி அலுவலர்கள் கால்வாயில் இருபுறமும் உள்ள புதர்களை அகற்றி தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அரக்கோணம் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அரக்கோணம் நகரம் மற்றும் தாலுகா பகுதியில் மழையால் வீடு இழந்தவர்களுக்கு தாசில்தார் ஜெயக்குமார் அரிசி, மண்எண்ணெய், வேட்டி, சேலை ஆகியவற்றை வழங்கினார். மேலும் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு நிதியுதவி விரைவில் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக அரக் கோணத்தில் 166 மில்லிமீட்டர் மழை பதிவானது. மற்ற பகுதிகளில் பதிவான மழைஅளவு மில்லிமீட்டரில் வருமாறு:-

காட்பாடி ரெயில்நிலையம்- 55.7, சோளிங்கர்- 42, காவேரிப்பாக்கம்- 38.4, ஆற்காடு- 38.2, அம்முண்டி- 38, பொன்னை- 26.8, வேலூர்- 25.2, வாணியம்பாடி- 17, வாலாஜா- 16.2, ஆலங்காயம்- 4.2, குடியாத்தம்- 4.2, ஆம்பூர்- 3.2, மேல்ஆலத்தூர்- 2.6.

Next Story