நவீன தொழில் நுட்பத்துடன் காட்பாடி ரெயில்வே மேம்பாலம் ரூ.2 கோடியில் சீரமைக்கப்படும் - கதிர்ஆனந்த் எம்.பி. பேட்டி


நவீன தொழில் நுட்பத்துடன் காட்பாடி ரெயில்வே மேம்பாலம் ரூ.2 கோடியில் சீரமைக்கப்படும் - கதிர்ஆனந்த் எம்.பி. பேட்டி
x
தினத்தந்தி 20 Sept 2019 4:15 AM IST (Updated: 20 Sept 2019 3:56 AM IST)
t-max-icont-min-icon

காட்பாடி ரெயில்வே மேம்பாலம் நவீன தொழில் நுட்பத்துடன் ரூ.2 கோடியில் சீரமைக்கப்படும் என கதிர்ஆனந்த் எம்.பி. கூறினார்.

காட்பாடி, 

காட்பாடி ரெயில் நிலையத்தில் நேற்று ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் மகேஷ், தெற்கு ரெயில்வே எம்.பி.க்கள் குழுத்தலைவர் கதிர்ஆனந்த் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தை ஆய்வு செய்தனர்.

அதைத்தொடர்ந்து கதிர்ஆனந்த் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-

தெற்கு ரெயில்வே எம்.பி.க்கள் குழுக்கூட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அப்போது நான் அந்த குழுவிற்கு தலைவராக தேர்வு செய்யப்பட்டேன். அந்த கூட்டத்தில் காட்பாடி ரெயில்வே மேம்பாலத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதன் அடிப்படையில் சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் மகேஷ் இன்று (நேற்று) இங்கு வந்து நேரடியாக ஆய்வு செய்தார். இந்த மேம்பாலம் போக்குவரத்து மற்றும் மழையின் காரணமாக சேதமடைந்துள்ளது.

1989-ம் ஆண்டு முதல் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் மேம்பாலத்தின் தூண்கள் பலப்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. நவீன தொழில் நுட்பத்துடன் மேம்பாலம் சீரமைக்கப்படும். அதற்காக ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் விடப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. இந்த சீரமைக்கும் பணியின்போது கனரக வாகனங்கள் மேம்பாலம் வழியாக செல்ல தடை விதிக்கப்படும். இதற்காக குடியாத்தம், காட்பாடி, வேலூர், லத்தேரி பகுதிகளில் அறிவிப்பு பலகை வைக்கப்படும்.

காட்பாடி ரெயில் நிலையத்தை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். காட்பாடி ரெயில் நிலையத்தில் நவீன கார் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. பிரீபெய்டு ஆட்டோ திட்டம் தற்போது செயல்படாமல் உள்ளது. இந்த திட்டத்தில் உள்ளூர் ஆட்டோ டிரைவர்கள் சேர்க்கப்பட்டு, பெர்மிட் வழங்கப்படும். மேலும் வடுகந்தாங்கல்-விரிஞ்சிபுரம் ரெயில்வே மேம்பாலத்தின் கீழே உள்ள சாலைகள் பழுதடைந்துள்ளது. அதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கார்த்திகேயன் எம்.எல்.ஏ, காட்பாடி ரெயில் நிலைய மேலாளர் ரவீந்திரநாத், மண்டலக்குழு முன்னாள் தலைவர் சுனில்குமார், தி.மு.க. பகுதி செயலாளர் வன்னியராஜா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story