உப்பூர் அனல் மின்நிலையத்திற்காக கடலுக்குள் பாலம் கட்டுவதை கைவிடக்கோரி படகில் சென்று முற்றுகை - ஏராளமானோர் பங்கேற்பு


உப்பூர் அனல் மின்நிலையத்திற்காக கடலுக்குள் பாலம் கட்டுவதை கைவிடக்கோரி படகில் சென்று முற்றுகை - ஏராளமானோர் பங்கேற்பு
x
தினத்தந்தி 20 Sept 2019 4:30 AM IST (Updated: 20 Sept 2019 3:56 AM IST)
t-max-icont-min-icon

உப்பூர் அனல் மின் நிலையத்திற்காக கடலுக்குள் பாலம் கட்டும் பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 25 கிராம மக்கள் படகில் சென்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்.எஸ்.மங்கலம்,

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அருகே அனல் மின் நிலையம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மின் நிலையத்தில் உலையை குளிர்விப்பதற்காக தண்ணீர் எடுத்து வரும் வகையில் கடலுக்குள் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு தேவிபட்டினம் முதல் உப்பூர் வரை உள்ள 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதைத்தொடர்ந்து கலெக்டரின் உத்தரவின் பேரில் பாலம் கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்தநிலையில் மீண்டும் அங்கு பணிகள் தொடங்கியதால் நேற்று மீனவர்கள் உள்பட கிராம மக்கள் படகுகளில் சென்று உப்பூர் அனல் மின் நிலையத்திற்கு தேவையான கடல்நீரை எடுக்கும் பகுதியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சுமார் 25 கிராம மக்கள் படகுகளில் கருப்புக்கொடி கட்டியபடி கடலுக்குள் சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று மாலை வரை இந்த போராட்டம் தொடர்ந்தது.

இதுகுறித்து கிழக்கு கடற்கரை கிராம மீனவர்களின் கூட்டமைப்பு செயலாளர் துரைபாலன் மற்றும் மீனவ சங்க தலைவர்கள் கூறியதாவது:-

உப்பூர் அனல் மின் நிலையத்தில் மின் உலைகளை குளிர்விப்பதற்காக கடலில் தண்ணீர் எடுப்பதற்காக கடலுக்குள் 8 கிலோ மீட்டர் நீளத்திற்கு பாலம் அமைக்கும் வேலை நடைபெற்று வருகிறது. இதனால் தேவிபட்டினம் முதல் தொண்டி வரையிலான கிராம மக்களின் மீன்பிடி தொழில் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த பகுதியில் உள்ள அலையாத்தி காடுகளும், கடலில் வளரக்கூடிய புற்கள், கடல் குதிரைகள், கடல் அட்டைகள் போன்ற உயிரினங்களும் அழியும் வாய்ப்பு உள்ளது. இதுதொடர்பாக சுதந்திர தினத்தன்று உப்பூரில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 1000-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களது எதிர்ப்பை காட்டும் வகையில் கருப்பு பேட்ஜ் அணிந்து கலந்து கொண்டு எங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.

அப்போது இனி பாலம் கட்டும் வேலை நடைபெறாது என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனால் கடந்த சில நாட்களாக மீண்டும் அங்கு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதையடுத்து நாங்கள் கடல் மார்க்கமாக படகில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கடலுக்குள் பாலம் கட்டும் திட்டத்தை கைவிடும் வரை எங்களின் போராட்டம் தொடரும். மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்க்கையையும் அழிக்கக்கூடிய இந்த திட்டத்தை அரசு கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story