ஆசிரியர் வீட்டில் 15 பவுன் நகை-பணம் திருட்டு


ஆசிரியர் வீட்டில் 15 பவுன் நகை-பணம் திருட்டு
x
தினத்தந்தி 20 Sept 2019 3:45 AM IST (Updated: 20 Sept 2019 3:56 AM IST)
t-max-icont-min-icon

பட்டப்பகலில் ஆசிரியரின் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகை, பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம், 

ராமநாதபுரம் பட்டணம்காத்தான் வேல்நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் திருமணிவாசகம்(வயது 50). இவர் திருப்புல்லாணி அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

இவரின் மனைவியும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் கணவன்-மனைவி இருவரும் பள்ளிக்கு புறப்பட்டு சென்று விட்டனர்.

அப்போது மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் வைக்கப்பட்டிருந்த 15 பவுன் நகை, ரொக்கம் ரூ.14 ஆயிரத்து 500, வெள்ளிப்பொருட்கள் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனர்.

வீடு திறந்து கிடப்பதை கண்டு அருகே குடியிருப்பவர்கள் திருமணிவாசகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து கணவன்-மனைவி இருவரும் விரைந்து வந்து பார்த்தபோது வீட்டில் நகை, பணம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். தடயவியல் நிபுணர்கள் வீட்டில் பதிவாகி இருந்த தடயங்களை பதிவு செய்தனர். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனையிடப்பட்டது.இதேபோல அதே பகுதியில் மற்றொரு வீட்டிலும் திருட முயற்சி நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Next Story