மங்களக்குடி கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்
மங்களக்குடி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பயனாளிகளுக்கு ரூ.67 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வீரராகவராவ் வழங்கினார்.
தொண்டி,
திருவாடானை தாலுகா மங்களக்குடி கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் கலெக்டர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது. கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் முருகேசன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சிவசங்கரன், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். தாசில்தார் சேகர் அனைவரையும் வரவேற்றார். முகாமில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். தொடர்ந்து பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 80 பயனாளிகளுக்கு ரூ.67 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கலெக்டர் பேசியதாவது:-
பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரசுத்துறை அலுவலர்கள் கிராமங்களுக்கு நேரடியாக சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்து உடனடி தீர்வு காணும் விதமாக மாதந்தோறும் ஒரு கிராமம் தேர்வு செய்யப்பட்டு மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. முகாமில் அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும், அந்த திட்டங்களின் மூலம் பயன் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் அந்தந்த துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் விளக்கி கூறப்படுகிறது.
முதல்-அமைச்சர் உத்தரவின்படி மாவட்டத்தில் உள்ள 400 வருவாய் கிராமங்களிலும் கடந்த மாதம் சிறப்பு குறை தீர்க்கும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதுதவிர ஊரக பகுதிகளில் உள்ள பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதிகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கி தொடர்ந்து கண்காணிக்க அலுவலர்களுக்கு உத்தர விடப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஆண்டு கோடை காலத்தையொட்டி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.15 கோடி மதிப்பில் பல்வேறு குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதேபோல எதிர்வரும் மழைக்காலத்தை கருத்தில் கொண்டு மழைநீரை சேமித்திட ஏதுவாக குடிமராமத்து திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள 69 பொதுப்பணித்துறை கண்மாய்கள், ஊரக வளர்ச்சி துறையின் கீழுள்ள 224 சிறுபாசன கண்மாய்கள், 988 ஊருணிகளில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நீர்நிலைகளின் கரைப்பகுதிகளில் பனை, வேம்பு, புளியமரம் உள்ளிட்ட பலன் தரும் மரக்கன்றுகளை நடவு செய்ய வேண்டும்.
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து துணிப்பைகள், பாத்திரங்கள் போன்றவற்றை பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் சுற்றுப்புற சுகாதாரம் மேம்படுவதுடன் மண்வளமும், நிலத்தடி நீர்வளமும் மேம்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட வழங்கல் அலுவலர் ப்ராங்க்ளின் கிறிஸ்டோபர், உதவி கலெக்டர் சரவண கண்ணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் சேக்அப்துல்லா, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் பாலாஜி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கயல்விழி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயந்தி, திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story