மானாமதுரை வங்கியில் கொலை முயற்சியில் ஈடுபட்ட கும்பலை துப்பாக்கியால் சுட்டு விரட்டிய காவலாளிக்கு போலீஸ் டி.ஐ.ஜி. பாராட்டு
மானாமதுரை வங்கியில் புகுந்து கொலை முயற்சியில் ஈடுபட்ட கும்பலை துப்பாக்கியால் சுட்டு விரட்டிய காவலாளியை அழைத்து, ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா பாராட்டினார். இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மானாமதுரை,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மேற்கு ஒன்றிய அ.ம.மு.க. செயலாளராக இருந்தவர் ஆவரங்காட்டைச் சேர்ந்த சரவணன். இவரை கடந்த மே மாதம் ஒரு கும்பல் கொலை செய்தது. இதுதொடர்பாக தங்கராஜ், தங்கமணி உள்ளிட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தங்கமணி தற்போது ஜாமீனில் உள்ளார்.
நேற்று முன்தினம் அவர் தனது நண்பர் கணேஷ்நாத்துடன் மோட்டார் சைக்கிளில் மானாமதுரை மரக்கடை வீதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை பின்தொடர்ந்து, 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் வந்தனர். அவர்களிடம் சிக்காமல் இருப்பதற்காக தங்கமணி, கணேஷ்நாத் ஆகியோர் அருகில் உள்ள ஒரு அரசு வங்கியின் உள்ளே ஓடினர். ஆனால் அந்த கும்பல் வங்கியின் உள்ளே புகுந்து தங்கமணியை சரமாரியாக வெட்டியது.
உடனே வங்கி காவலாளி செல்லநேரு ஓடிவந்து, தான் வைத்திருந்த துப்பாக்கியால் அந்த கும்பலை சுட்டார். இதில் அந்த கும்பலை சேர்ந்த தமிழ்செல்வன் சுருண்டு விழுந்தார். மற்றவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மானாமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் சம்பத் விசாரணை நடத்தி வருகிறார். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த தங்கமணி அளித்த புகாரின் பேரில் ஊமைத்துரை, தமிழ்செல்வன் உள்பட 5 பேர் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பூமிநாதன் என்பவர் போலீசாரிடம் பிடிபட்டு இருப்பதாகவும், அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
அதே நேரத்தில் வங்கிக்குள் புகுந்து அரிவாளால் வெட்டி கொலை முயற்சியில் ஈடுபட்ட கும்பலை துணிச்சலாக துப்பாக்கியால் சுட்டு விரட்டிய காவலாளி செல்லநேருவை அழைத்து, ராமநாதபுரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா பாராட்டியதுடன், சான்றிதழும் வழஙகினார்.
சம்பவம் தொடர்பாக மானாமதுரை துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கூறும் போது, “சம்பவம் நடப்பதற்கு முன்பு இருதரப்பினரையும் அழைத்து எச்சரித்து இருந்தோம். இந்த நிலையில்தான் வங்கியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அதில் தொடர்புடையவர்களை தனிப்படை அமைத்து தேடி வருகிறோம்” என்றார்.
Related Tags :
Next Story