புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு: சேலம் மாவட்டத்தில் 34 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை


புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு: சேலம் மாவட்டத்தில் 34 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை
x
தினத்தந்தி 20 Sept 2019 4:30 AM IST (Updated: 20 Sept 2019 3:57 AM IST)
t-max-icont-min-icon

புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் மாவட்டத்தில் 34 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன.

சேலம், 

மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின்படி, போக்கு வரத்து விதிமீறல்களுக்கு அதிக அபராதம் விதிப்பு, வாகன பதிவு கட்டணம் உயர்வு, மூன்றாம் நபர் காப்பீட்டு கட்டணம் உயர்வு போன்றவை அமலுக்கு வந்துள்ளது. இதற்கு நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் மற்றும் இதர வாகன ஓட்டிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் மோட்டார் வாகன சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் நேற்று ஒருநாள் லாரிகள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற்றது.

அதன்படி சேலம் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் லாரிகள் இயக்கப்படவில்லை. சேலம் செவ்வாய்பேட்டை லாரி மார்க்கெட் பகுதியில் லாரிகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் லாரி டிரைவர்கள், கிளனர்கள் அங்கேயே சமைத்து சாப்பிட்டதை காணமுடிந்தது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் சுமார் 34 ஆயிரம் லாரிகள் ஓடவில்லை. சத்திரம் பகுதியில் ரெயில்வே கூட்ஸ் ஷெட்டில் வழக்கமாக ரெயில்களில் இருந்து இறக்கப்படும் சிமெண்டு மற்றும் அரிசி மூட்டைகள் நேற்று லாரிகளில் எடுத்து செல்லப்படவில்லை.

தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஜவுளி, மஞ்சள், இரும்பு கம்பிகள், ஜவ்வரிசி, காய்கறிகள் ஆகியவை தேக்கம் அடைந்தன. சேலம் செவ்வாய்பேட்டையில் வழக்கமாக லாரிகள் அதிகளவில் வந்து செல்வதுண்டு. ஆனால் நேற்று வேலை நிறுத்தம் காரணமாக லாரிகள் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

இது குறித்து சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவரும், அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் நிர்வாக குழு உறுப்பினருமான சென்னகேசவன் கூறுகையில், புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருநாள் அடையாள லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக நாடு முழுவதும் ரூ.100 கோடி மதிப்புள்ள பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன. தமிழகத்தில் ரூ.10 கோடி மதிப்புள்ள சரக்குகள் ஏற்றப்படாமல் தேங்கியுள்ளன. தமிழகத்தில் 4 லட்சம் லாரிகளும், சேலம் மாவட்டத்தில் 34 ஆயிரம் லாரிகளும் ஓடவில்லை. இதனால் சேலத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் ஜவ்வரிசி, தேங்காய், இரும்பு பொருட்கள் அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வேண்டும், என்றார்.

Next Story