கொல்லிமலையில் மனுநீதிநாள் முகாம்: ரூ.11½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்


கொல்லிமலையில் மனுநீதிநாள் முகாம்: ரூ.11½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்
x
தினத்தந்தி 19 Sep 2019 10:45 PM GMT (Updated: 19 Sep 2019 10:27 PM GMT)

கொல்லிமலையில் நடந்த மனுநீதிநாள் முகாமில் 82 பயனாளிகளுக்கு ரூ.11½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.

நாமக்கல், 

கொல்லிமலை செங்கரையில் மனுநீதிநாள் முகாம் கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நடந்தது. முகாமுக்கு சந்திரசேகரன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இந்த முகாமில் கலெக்டர் பேசும்போது கூறியதாவது:-

கொல்லிமலை பகுதியில் தோட்டக்கலைத்துறையின் மூலம் கடந்த 20 ஆண்டுகளாக சில்வர் ஓக் மரக்கன்றுகள், காபி, மிளகு ஆகிய பயிர்கள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொல்லிமலை மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. குறைந்த நீரைக்கொண்டு அதிக பரப்பளவில் விவசாயம் மேற்கொள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க அரசு மானியம் வழங்கி வருகின்றது.

மகப்பேறு நிதிஉதவி திட்டத்தின் கீழ் கர்ப்பிணிகளுக்கு ரத்தசோகையினை குறைக்கவும், குழந்தையின் எடையை அதிகரிக்கவும் அம்மா தாய்-சேய்நல ஊட்டச்சத்து பெட்டகத்தினை தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது. இதை நீங்கள் பயன்படுத்தி கொள்ளவேண்டும்.

சமூக நலத்துறையின் சார்பில் பெண்கள் கட்டாயம் கல்வி கற்கவேண்டும் என்பதற்காக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் 10-ம் வகுப்பு படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், ரூ.25 ஆயிரம் திருமண நிதிஉதவியும் வழங்கப்பட்டு வருகிறது. பட்டம் மற்றும் பட்டயம் படித்த ஏழைப்பெண்களுக்கு திருமாங்கல்யத்திற்கு 8 கிராம் தங்கத்துடன்் ரூ.50 ஆயிரம் திருமண நிதிஉதவி வழங்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தில் பயன்பெற திருமணத்திற்கு முன்பே இணையதளம் மூலமாக விண்ணப்பத்தினை பதிவு செய்திடவேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த முகாமில் 82 பயனாளிகளுக்கு ரூ.11 லட்சத்து 67 ஆயிரம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். முகாமில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் பாலசுப்பிரமணியன், கால்்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பொன்னுவேல் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக சுகாதார பணியாளர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்ட தூய்மை பாரத விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இதை கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார். பின்னர் அனைவரும் பிளாஸ்டிக் இல்லா நாமக்கல் மாவட்டத்தை உருவாக்கும் வகையில் தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்வோம் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Next Story