தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வாகனம் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்


தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு விழிப்புணர்வு வாகனம் - அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 19 Sep 2019 11:00 PM GMT (Updated: 19 Sep 2019 10:28 PM GMT)

விவசாய விளைபொருட்களை மதிப்பு கூட்டும் முறை குறித்து தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கு வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் தொடங்கி வைத்தார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் 2 நடமாடும் மதிப்புகூட்டும் வாகனங்கள் இயக்க தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். பாப்பிரெட்டிப்பட்டி ஏ.கோவிந்தசாமி எம்.எல்.ஏ., தர்மபுரி உதவி கலெக்டர் சிவன்அருள், தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு நடமாடும் மதிப்பு கூட்டும் வாகனங்களின் இயக்கத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் 61,550 டன் தக்காளி உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதிக உற்பத்தியின்போது பெரும்பாலும் விவசாயிகள் விலை வீழ்ச்சியை சந்திக்க நேரிடுகிறது. தக்காளி விலை வீழ்ச்சியின்போது தக்காளியை பண்ணை அளவிலேயே மதிப்புகூட்டி விவசாயிகள் நஷ்டம் அடையாமல் இருப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்த தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் ரூ.2 கோடி மதிப்பீட்டில் 5 நடமாடும் தக்காளி பதப்படுத்தும் வாகனங்களை கடந்த மாதம் முதல்-அமைச்சர் தொடங்கி வைத்தார்.

தக்காளியிலிருந்து பல்வேறு மதிப்பு கூட்டு பொருட்களை செய்வதோடு மாம்பழம், பப்பாளி, கொய்யா மற்றும் திராட்சை ஆகிய பழங்களையும் பதப்படுத்தி அதன் சாறுகளைக்கொண்டு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கவும், அதன் மூலம் விவசாயிகளுக்கு அதிக லாபம் கிடைக்கவும் இந்த வாகன வசதி தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறைக்கு 2 நடமாடும் மதிப்பு கூட்டும் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நடமாடும் தக்காளிபதப்படுத்தும் வாகனங்கள் மூலமாக வருகிற அக்டோபர் மாதம் 23-ந்தேதி வரை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிராமங்களில் நேரடி செயல்விளக்கம் மூலம் விவசாயிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

இவ்வாறுஅமைச்சர் கே.பி.அன்பழகன் பேசினார்.

இதைத்தொடர்ந்து பாலக்கோட்டில் ரூ.9.17 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள முதன்மை நிலை பதப்படுத்தும் மையத்தில் காய்கறிகள் மற்றும் பழங்களை தரம் பிரித்தெடுக்கும் பணியினை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சிகளில் வேளாண்மை துணை இயக்குனர் நரசிம்மரெட்டி, பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் தொ.மு.நாகராஜன், முன்னாள் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் கே.வி.அரங்கநாதன், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவர் கோபால்ரூபவ், மத்திய கூட்டுறவு வங்கி இயக்குநர்கள் பொன்னுவேல், சிவப்பிரகாசம்ரூபவ் முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் சங்கர், வேளாண்மை அலுவலர்கள் அர்ச்சுனன், மணியரசன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

Next Story