ஓசூர் உழவர் சந்தை அருகே, ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - வியாபாரிகள் சாலை மறியல்
ஓசூர் உழவர் சந்தை அருகே வைக்கப்பட்டிருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் உழவர் சந்தை அருகே சாலையின் இருபுறமும் 100-க்கும் மேற்பட்ட சிறு வியாபாரிகள், பழங்கள், காய்கறிகள் உள்ளிட்ட கடைகளை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர். மக்கள் நடமாட்டமும், வாகன போக்குவரத்தும் இந்த சாலையில் அதிகம் இருந்து வருகிறது. இப்பகுதியில் உள்ள நடைபாதை கடைகளால், உழவர் சந்தைக்கு வந்து செல்வோரும், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் சென்றது. இந்தநிலையில் நேற்று ஓசூர் உதவி கலெக்டர் குமரேசன், நகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் சாலையோரத்தில் ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடைபெற்றது. இதையொட்டி ஓசூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மீனாட்சி மேற்பார்வையில் போலீசாரும் அங்கு பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.
இதையொட்டி கடைகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் உழவர் சந்தை சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். மேலும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படாத வகையிலும், சாலையை ஆக்கிரமிக்காத வகையிலும் கடைகளை நடத்துமாறு வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
Related Tags :
Next Story