சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைப்பதில் உத்தவ் தாக்கரே, முதல்-மந்திரி உறுதியாக உள்ளனர் சஞ்சய் ராவத் எம்.பி. பேட்டி
சட்டசபை தேர்தலில் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி அமைப்பதில் உத்தவ் தாக்கரே, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உறுதியாக உள்ளனர் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறினார்.
மும்பை,
மராட்டிய சட்டசபைக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜனதா, சிவசேனா கட்சிகள் கூட்டணி வைத்து போட்டியிட உள்ளன. இரு கட்சிகளும் சரிசமமான தொகுதிகளில் போட்டியிடுவது என நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தையின் போதே பா.ஜனதா தலைவர் அமித்ஷா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இடையே உடன்பாடு ஏற்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் அபார வெற்றி மற்றும் காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து ஆகியவற்றால் பா.ஜனதாவுக்கு செல்வாக்கு அதிகரித்து இருப்பதாக கூறப்படும் நிலையில், சிவசேனாவுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்க அந்த கட்சி முடிவு செய்து இருப்பதாக தெரியவந்தது. இது கூட்டணி உடன்பாட்டில் இடியாப்ப சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
சந்தேகம்
இந்த நிலையில் சிவசேனா கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும், மாநில போக்குவரத்து துறை மந்திரியுமான திவாகர் ராவ்தே நேற்று முன்தினம் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி ஏற்படுவது சந்தேகம் என்ற தகவலை கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
பா.ஜனதாவை விட சிவசேனாவுக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்க முடிவு செய்து இருப்பதையும், சிவசேனா எதிர்ப்பால் கைவிடப்பட்ட நானார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை கொண்டு வர மறுஆய்வு செய்வோம் என்று முதல்-மந்திரி கூறியிருந்ததையும் சுட்டிக்காட்டி அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.
இந்த பிரச்சினையை தொடர்ந்து, சிவசேனா மூத்த தலைவரான சஞ்சய் ராவத் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:-
உறுதியாக உள்ளனர்
தொகுதி பங்கீடு குறித்து உத்தவ் தாக்கரேவும், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிசும் பேசி வருகின்றனர். கூட்டணி அமைப்பதில் அவர்கள் 2 பேரும் உறுதியாக உள்ளனர். மந்திரி திவாகர் ராவ்தே எதையும் மனதில் வைத்து பேசவில்லை. அமித்ஷா முன்னிலையில், 2 கட்சிகளும் சரிசமமான தொகுதிகளில் போட்டியிடுவது என ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது குறித்து தான் பேசி இருக்கிறார்.
ஆரேகாலனி, நானார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை விவகாரம் கூட்டணி அமைவதில் சிக்கலை ஏற்படுத்தும் என நான் நினைக்கவில்லை. மும்பையின் நலன்கருதியே ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் திட்டத்துக்காக மரங்களை வெட்ட எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், முன்னாள் முதல்-மந்திரி நாராயண் ரானே பா.ஜனதாவில் சேர உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் குறித்து கேட்ட போது, ‘‘அது பற்றி எங்களுக்கு தெரியாது. பா.ஜனதா தனி கட்சி. விரும்புபவர்களை கட்சியில் சேர்க்க அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது’’ என்றார்.
Related Tags :
Next Story