சீர்காழியில் கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு - ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்
சீர்காழியில் கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர். இதைத்தொடர்ந்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
சீர்காழி,
சீர்காழியில் நேற்று வக்கீல்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்தனர். பின்னர் வக்கீல்கள், கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் ராஜாராமன் தலைமை தாங்கினார். செயலாளர் மணிவண்ணன், பொருளாளர் தியாகராஜன் துணை செயலாளர் சுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மூத்த வக்கீல்கள் சுந்தரய்யா, சத்தியமூர்த்தி, கார்த்தி, பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது, இளம் வக்கீல்களுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வீதம் 3 ஆண்டுகளுக்கு தமிழக அரசு வழங்க வேண்டும். வக்கீல்கள் சேமநல நிதியை ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மோட்டார் வாகன திருத்த சட்டம் 2019 - ன்படி வக்கீல்களுக்கு பாதகம் இல்லாத வகையில் புதிய நடைமுறை விதிகளை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் வக்கீல்கள் ராம்குமார், ராஜேஷ், முத்துகுமார், கவிதா உள்பட பலர் கலந்து கொண்டனர். வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்ததால் கோர்ட்டு பணி பாதிக்கப்பட்டது. நேற்று நடைபெற இருந்த வழக்குகள் மாற்று தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story