நீர்நிலைகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை - தீயணைப்புத்துறை சார்பில் நடந்தது


நீர்நிலைகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை - தீயணைப்புத்துறை சார்பில் நடந்தது
x
தினத்தந்தி 21 Sept 2019 3:45 AM IST (Updated: 20 Sept 2019 8:46 PM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கோட்டைக்குளத்தில், தீயணைப்பு துறை சார்பில் நீர்நிலைகளில் சிக்கியவர்களை எப்படி மீட்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை நடந்தது.

திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் பருவமழை விரைவில் தொடங்க உள்ளது. அப்போது மாவட்ட பகுதிகளில் உள்ள குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். இந்த நிலையில், நீர்நிலைகளில் ஆபத்தான முறையில் குளிக்க முயல்பவர்கள் திடீரென நீரில் மூழ்கினால் அவர்களை எப்படி காப்பாற்றுவது என்றும், மழைக்காலங்களில் நீர்நிலைகளில் சிக்கியவர்களை எப்படி மீட்பது என்பது குறித்தும் திண்டுக்கல் தீயணைப்பு துறையினர் சார்பில் நேற்று கோட்டைக்குளத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.

தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் பாதுகாப்பு ஒத்திகையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து கோட்டை குளத்தில் ஒருவர் தவறி விழுவது போன்றும், அவரை ரப்பர் படகு மூலம் தீயணைப்பு துறையினர் மீட்டு கரைக்கு கொண்டுவருவது போன்றும் ஒத்திகை நடத்தப்பட்டது. பின்னர் இது குறித்து நிலைய அலுவலர் சக்திவேல் கூறியதாவது:-

நீர்நிலைகளில் தவறி விழுபவர்களை உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் எப்படி மீட்க வேண்டும் என்பது குறித்த பாதுகாப்பு ஒத்திகை தான் கோட்டை குளத்தில் நடத்தப்பட்டது. இந்த ஒத்திகையின் மூலம் தீயணைப்பு துறையினருக்கும் எப்படி பாதுகாப்பான முறையில் நீரில் மூழ்கி தவிப்பவர்களை மீட்கலாம் என்ற தெளிவு கிடைக்கும்.

அதேவேளையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும். அதாவது, பொதுமக்கள் முன்னிலையில் நடத்தப்படும் இதுபோன்ற ஒத்திகையால் யாரேனும் நீர்நிலைகளில் தவறி விழுந்தால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்களுக்கு ஏற்படும் என்றார்.

Next Story